பக்கம் எண் :


352


    (சொ - ள்.) முழங்குதிரை கொழீஇய மூரி எக்கர்த் தடந்தாள் தாழை - ஒலிக்கின்ற அலைகொழித்த பெரிய மணலானாகிய திடரின்கணுள்ள வளைந்த அடியையுடைய தாழையின் ; முள் உடை நெடுந் தோட்டு அக மடல் பொதுளிய - முள்ளையுடைய நெடிய தொகுதியாகிய இலையின் உள்மடலிலே தோன்றிய ; முகைமுதிர் வான்பூங் கோடு வார்ந்து அன்ன வெள் பூத் தாழை - அரும்புமுதிர்ந்த வெளிய பொலிவு பெற்ற சங்கினை நீட்டித்து வைத்தாலொத்த வெளிய பூவையுடைய தாழை ; எறிதிரை உதைத்தலின் பொங்கித் தாதுசோர்பு - எறிகின்ற அலை மோதுதலாலே பொங்கித் தாது உதிர்ந்து; சிறுகுடிப் பாக்கத்து மறுகு புலா மறுக்கும் மணம் கமழ் கானல் - சிறிய குடியையுடைய பாக்கத்துத் தெருவிலெழுகின்ற புலவுநாற்றத்தைப் போக்காநிற்கும் மணங் கமழ்கின்ற கடலருகிலுள்ள சோலையின் கண்ணே; இயைந்த நங்கேண்மை ஒரு நாள் பிரியினும் உய்வு அரிது என்னாது - காதலருடனே தொடர்ந்து ஒன்றிய நம்முடைய நட்பானது ஒருநாள் இடையீடுபட்டுப் பிரிந்தாலும் உயிருய்தல் அரிதாகுமென்று கருதாமல்; கதழ் பரி நெடுந்தேர் வரவு ஆண்டு அழுங்கச் செய்த தன் தப்பல் அன்றியும் - விரைந்த செலவினையுடைய குதிரைப்பூட்டிய அவரது நெடிய தேரின் வருகையை இனி அக் கானலிடத்து வாராது அலரால் மறிக்கப்பட்டு வருந்தச் செய்த தன்னுடைய தவறுகளை வெளிக்காட்டா திருப்பதன்றியும்; இவ் அழுங்கல் ஊர் உயவுப் புணர்ந்தன்று - இப் பழிமொழியாகிய பேரிரைச்சலையுடைய ஊரானது இங்ஙனம் ஒருதேர் வருவதன்காரணந்தான் யாதோவென்று ஆராய்ந்து அதனால் வருத்தமும் அடைகின்றது; இஃதென்ன கொடுமையுடையது காண்? இங்ஙனமாயின் இனி எவ்வாறு அவருடன் களவொழுக்கம் நிகழாநிற்குமன்!; எ - று.

     (வி - ம்.) ஒருநாள் பிரியினும் உய்வதரிதென்றதனால் இனி வரைந்து தலையளி செய்யாவிடின் இறந்துபடுமென்றறிவுறுத்தினாள். ஊரின் கௌவை மேலிட்டதன்றியும் தேர்வருகையை உசாவாநிற்குமென்றதனாலே இனிக் களவொழுக்க மியலாமை யறிவுறுத்தினாள். இஃது அவள் புணர்வு மறுத்தல். உய்வரிதென்றது, துன்பத்துப் புலம்பல்.

     உள்ளுறை :- அலைமோதுதலாலே தாழையின் மகரந்தம் உதிர்ந்து மறுகிலுள்ள புலவுநாற்றத்தை நீக்குதல்போலத் தலைவனை அவாவானது தூண்டுதலாலே அவன் பொருளை எமரில்லத்துக் கொணர்ந்து குவித்து வரைந்து ஊரிலெழுந்த அலரைப் போக்குவானாக வென்றதாம். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - வரைவுகடாதல்.

     (பெரு - ரை.) முதிர்ந்த தாழைமலர் திரைமோதுதலானே பொங்கித் தாதுதிர்த்துப் பாக்கத்து மறுகுபுலவு தீர்க்கும் என்பதன்கண் உள்ளுறை பொருள், காதல் முதிர்ந்த தலைவனாகிய நீ நின்னுடைய களவொழுக்கம்