(து - ம்.) என்பது, இயற்கைப் புணர்ச்சியின்பின் தலைவியுற்ற வேறுபாட்டையும், பின்பு தலைமகன் கையுறையேந்திவந்து இரந்து நிற்றலையும் அறிந்த தோழி, இவனொரு குறையுடையான் போலும், அதுவும் இவள்கண்ணதேயாகுமென ஆராயும்பொழுது அதுகாறும் பொறானாய்த் தான் கூறுவதனைத் தோழி கேட்டு விரைந்து குறை முடிக்குமாறு தன்னெஞ்சை நோக்கி, "மடந்தாய்! யான் எப்பொழுது நின்னை அணையவருவதோ கூறாய்" என்றலுங் குறியிடத்து வந்து இன்மொழி கூறிப்பெயர்ந்த கொடிச்சி போகும் புறநோக்கிக் கைவிட்டு நின்ற நெஞ்சமே, ஒருத்தி நின்கையிலகப்பட்டால் நுகராது விடலாமோ? விடுதலாகாதேயென வருந்திக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, ""தோழி குறைஅவட் சார்த்தி மெய்யுறக் கூறலும்"" (தொல். கள. 11) என்னும் விதி கொள்க.
| தளிர்சேர் தண்தழை தைஇ நுந்தை |
| குளிர்வாய் வியன்புனத்து எற்பட வருகோ |
| குறுஞ்சுனைக் குவளை அடைச்சிநாம் புணரிய |
| நறுந்தண் சாரல் ஆடுகம் வருகோ |
5 | இன்சொன் மேவலைப் பட்டவென் நெஞ்சுணக் |
| கூறினி மடந்தைநின் கூரெயிறு உண்கென |
| யான்தன் மொழிதலின் மொழியெதிர் வந்து |
| தான்செய் குறியில் இனிய கூறி |
| ஏறுபிரி மடப்பிணை கடுப்ப வேறுபட்டு |
10 | உறுகழை நிவப்பின் சிறுகுடிப் பெயருங் |
| கொடிச்சி செல்புறம் நோக்கி |
| விடுத்த நெஞ்சம் விடலொல் லாதே. |
(சொ - ள்.) மடந்தை தளிர்சேர் தண்தழை தைஇ நுந்தை குளிர்வாய் வியன் புனத்து எல் பட வருகோ - மடந்தாய்! தளிர்