(து - ம்.) என்பது, பரத்தையிற் பிரிந்துவந்த தலைமகனைக் காதலி புலந்து கொள்ளலும் அதனைத் தோழியாலே தணிக்கக் கருதி அவள் பாலுற்றனனாக. அவனைநோக்கி, "ஊரானே! இப்பெற்றிப்பட்ட எனைத்தும் செல்வமெனப்படுவதன்று; அடைந்தாரைக் காத்தலே செல்வமெனப்படுவது; அச்செயல் நின்பால் இல்லை"யென்று தலைவியூடல் தீரும்வண்ணம் கடிந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, "பிழைத்துவந் திருந்த கிழவனை நெருங்கி இழைத்து ஆங்கு ஆக்கிக் கொடுத்தற் கண்ணும்" (தொல். கற். 9) என்னும் விதிகொள்க.
| அரிகால் மாறிய அங்கண் அகல்வயல் |
| மறுகால் உழுத ஈரச் செறுவின் |
| வித்தொடு சென்ற வட்டி பற்பல |
| மீனொடு பெயரும் யாணர் ஊர |
5 | நெடிய மொழிதலுங் கடிய ஊர்தலும் |
| செல்வம் அன்றுதன் செய்வினைப் பயனே |
| சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர் |
| புன்கண் அஞ்சும் பண்பின் |
| மென்கண் செல்வஞ் செல்வமென் பதுவே. |
(சொ - ள்.) அரி கால் மாறிய அம் கண் அகல்வயல் மறுகால் உழுத ஈரச் செறுவின் - நெல் அறுத்து நீங்கப்பெற்ற அழகிய இடமகன்ற வயலின்கண்ணே மறுபடி உழுத ஈரமுடைய சேற்றில்; வித்தொடு சென்ற வட்டி பல் பல மீனொடு பெயரும் - விதைக்கும் வண்ணம் விதைகொண்டு சென்ற கடகப்பெட்டியில் மிகப் பலவாகிய மீன்களைப் பிடித்துப் போகட்டு மீண்டு கொண்டு வருகின்ற;