(து - ம்.) என்பது, இயற்கைப்புணர்ச்சி புணர்ந்தபின் வாயில் பெற்றுய்ந்த தலைமகன் பின்னர்த் தலைமகளுந் தோழியும் ஓரிடத்திலிருப்பதை யறிந்து மதியுடன்படுப்பான் ஆங்கேகிப் புதுவோன்போல நின்று "சிறுமிகளே, நுமது சிறுகுடி யாதென வினவவும் நீங்கள் சொல்லுகின்றிலீர்; அது கிடக்க, இத் தினைப்புனங்காவலும் நும்முடையதேயோ இதனையேனுங் கூறுமினோ" என்று தன் கருத்தொடு அவ்விருவர் கருத்தினையும் ஒன்றுபடுத்துணரக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "ஊரும் பெயரும் கெடுதியும் பிறவும், நீரிற் குறிப்பின் நிரம்பக் கூறித், தோழியைக் குறையுறு பகுதியும்" (தொல். கள. 11) என்னும் விதியில் பிறவும் என்பதனால் அமைத்துக் கொள்க.
| அருவி ஆர்க்கும் பெருவரை நண்ணிக் |
| கன்றுகால் யாத்த மன்றப் பலவின் |
| வேர்க்கொண்டு தூங்குங் கொழுஞ்சுளைப் பெரும்பழம் |
| குழவிச் சேதா மாந்தி அயலது |
5 | வேய்பயில் இறும்பின் ஆம்அறல் பருகும் |
| பெருங்கல் வேலிச் சிறுகுடி யாதெனச் |
| சொல்லவும் சொல்லீ ராயிற் கல்லெனக் |
| கருவி மாமழை வீழ்ந்தென எழுந்த |
| செங்கேழ் ஆடிய செழுங்குரற் சிறுதினைக் |
10 | கொய்புனம் காவலும் நுமதோ |
| கோடேந்து அல்குல் நீள்தோ ளீரே. |
(சொ - ள்.) கோடு ஏந்து அல்குல் நீள் தோளீரே - பக்கம் உயர்ந்த அல்குலையும் பெருத்த தோளையுமுடைய சிறுமிகளே!; அருவி ஆர்க்கும் பெருவரை நண்ணி - அருவியொலிக்கின்ற பெரிய மலையை யடைந்து! கன்று கால் யாத்த மன்றப் பலவின் வேர்க்கொண்டு தூங்குங் கொழுஞ்சுளைப் பெரும்பழம் - ஆவினது இளங்கன்றைக் காலிலிட்ட கயிறு பிணித்த தழைந்த மன்றம் போன்ற பலாமரத்தின் வேரிலே காய்த்துத் தூங்காநின்ற கொழுவிய சுளையையுடைய பெரிய பழத்தை; குழவிச் சேதா மாந்தி - அவ்விளங்கன்றையுடைய சிவந்த பசுவானது தின்று; அயலது வேய் பயில் இறும்பின் ஆம் அறல் பருகும் - பக்கத்திலுள்ளதாகிய மூங்கில் நெருங்கிய சிறுமலையின்கணுள்ள குளிர்ந்த நீரைப் பருகாநிற்கும்; பெருங்கல் வேலிச் சிறுகுடி யாது எனச் சொல்லவும் சொல்லீர் ஆயின் - பெரியமலையை அரணாகவுடைய நுமது