பக்கம் எண் :


369


சிறிய குடிதான் யாதோ என யான் வினவ அதற்கு விடையொன்று சொல்லுதலையுஞ் செய்திலீர்! ஆயினும் அதுகிடக்க; கருவி மா மழை கல்லென வீழ்ந்தென - மின்னல் முதலாய தொகுதியையுடைய கரிய மேகம் கல்லென்னும் ஒலியோடு மழையைப் பெய்ததனாலே; எழுந்த செங்கேழ் ஆடிய செழுங்குரல் சிறுதினைக் கொய்புனம் காவலும் நுமதோ - விளைந்த சிவந்த நிறம் பொருந்திய செழுவிய கதிர்களையுடைய கொய்யத்தக்க இத்தினைப் புனங்காவலும் நும்முடையதுதானோ? இதனை யேனுங் கூறுங்கோள்; எ - று.

     (வி - ம்.) இறும்பு - சிறிய மலை. ஆம் - ஈரம். அறல் - நீர். கருவி - மின்னல் முதலியவற்றின் தொகுதி. கேழ் - நிறம். முன்றிலின்கண்ணே பலர் கூடி வைகுமாறு மன்றுபோல நிற்றலின் மன்றப் பலவென்றார். ஊர்ப்பொது மரமுமாம்.

     கோடேந்து அல்குலெனத் தான் முன்பு கண்டு வைத்ததாகக் கூறலின் முன்னுறு புணர்ச்சி் அறிவுறுத்தினான். வேற்றுமையிலீ ரென்பான் நீள்தோளீ ரென்றான். இதனானே தலைவியுள்ளக் கருத்தின்வழி நீ யொழுக வேண்டுமென்று ஒற்றுமைநயத்தாற் கூறினானுமாம். புனமழிந்தாற் கூட்டமின்மை கூறுவான் கொய்கின்ற புனமென்றான். கொய்தழிந்தவழித் தலைவி மனையகம் புகுமாதலின் ஆண்டு இரவுக்குறி வேண்டுவான் சிறுகுடியாதென வினாவினமை கூறினான்.

     உள்ளுறை:- கன்றையுடைய சேதா ஆண்டுள்ள பலாப்பழத்தைத் தின்று அயலிலுள்ள இறும்பின் நீரைப் பருகுமென்றது, இத்தலைவியை முன்பே இயற்கைப்புணர்ச்சியாலே பெற்றுடைய யான் இங்குப் பகற்குறியிற் கூடி அப்பால் இரவுக்குறியுங் கூடி நுகர்ந்து மகிழ்வேனென்றதாம். மெய்ப்பாடு - இளிவரலைச் சார்ந்த பெருமிதம். பயன் - மதியுடம்படுத்தல்.

     (பெரு - ரை.) கொடுஞ்சினைப் பெரும்பழம் என்றும் பாடம்.

(213)
  
214. கருவூர்க் கோசனார்
     திணை : பாலை.

     துறை : இஃது, உலகியலாற் பிரிவுணர்த்தப்பட்ட தலைமகன் குறித்த பருவங்கண்டு தலைமகள் சொல்லியது.

     (து - ம்.) என்பது, இரந்தோர்க் கீதல் முதலாய காரணத்தானே பொருள்வயிற பிரியுந் தலைமகன் இன்னபருவத்து வருவேனென்றபடி வாராமையாலே அவன் குறித்த பருவம் வரக்கண்ட தலைவி, போதணிய வருவே னென்று சூளுரை கூறியகன்ற நம் தலைவர் தாங்கூறிய பருவத்துக்குரிய இடிமுழக்கத்தைக் கேட்டிலரோவென வருந்திக் கூறாநிற்பது.

     (இ - ம்.) இதனை, "தோழிக் குரியவை.............................ஆவயின் வரூஉம் பல்வேறு நிலையினும்" (தொல். கற். 6) என்பதன்கண் அமைத்துக் கொள்க.