பக்கம் எண் :


388


பருவம் வந்திறுத்ததாதலின்; நம் வயின் பிரியலம் என்று தெளித்தோர் தேஎத்து - 'இனி நம் வயிற் பிரியகில்லோம்.' என்று என்னைத் தெளிவித்தனர், அங்ஙனம் தெளிவித்தவராய்ப் பின்பு; கயன் அறக் கண் அழிந்து உலறிய பல் மா நெடு நெறி - குளங்களில் நீர்வற்றத் தடையறச் செவ்வியழிந்து காய்ந்த பல பெரிய நெடிய நெறியையுடைய; வினை மூசு கவலை விலங்கிய வெம்முனை அருஞ்சுரம் முன்னியோர்க்கு - மறத் தொழில் நெருங்கிய கவர்ந்த வழிகள் குறுக்கிட்ட கொடிய முனையையுடைய செல்லுதற்கரிய சுரத்தின் கண்ணே சென்றனர், அவ்வாறு சென்றவர் நிமித்தமாக; இனி யான் எவன் மொழிகு - அவர்பால் இனி யான் யாது சொல்லமாட்டுவேன்? எ - று.

     (வி - ம்.) கயன் - குளம். உலறுதல் - காய்தல். வினை - போர் வினை. விலங்குதல் - குறுக்கிடுதல். பின்பனியென்பதுமுதல் பிரியலமென்றதன் காறும் தலைவன் கூற்றைக்கொண்டு கூறியது.

     பருவவியல்பு அறியாதார் பிரியக்கருதினால் அவரைத் தெளித்தலுமாம். அங்ஙனமின்றித் தாம் அறிந்துவைத்துப் பிரிபவர்க்கு யான் யாது கூறவல்லேனென்றழிந்து கூறினாள். பிரியலமென்று கூறிப்பிரிந்ததனால் நம் பால் அன்புடையவரென அசதியாடிக்கூறினாள். மன்னும் பெரியரென்றதும் அது. உலறியகொடியநெறியிலே செல்லுகின்றனரென்றது, அத்தகைய நெறியிலே செல்லுபவர் நெஞ்சமும் பசையற்ற கொடுமையுடையதாதலின் அவர்திறத்து யாது சொல்ல மாட்டுவேன் என்றதூஉமாம். மெய்ப்பாடு - அழுகை. பயன் - அயாவுயிர்த்தல்.

     (பெரு - ரை.) மன்னும் - மிகவும். ''பின்பனி...........வந்தன்று'' என்னுமளவும் தலைவியே கூறினள் என்று கோடலே அமையும், தலைவன் கூற்றைக் கொண்டு கூறினள் எனல் வேண்டாவாம். அவர் தாமே உணர்ந்து பிரியாமைக்குப் பல ஏதுக்கள் உளவாகவும் மேலும் பிரியலம் என்று தெளித்தவராகவும் அன்பினராகவும் மிகப் பெரியராகவும் இருக்கின்ற அவரே பிரிவார் எனின் அவர்க்கு யாம் கூறயாதுளது என்று வருந்தியபடியாம். 'வில்மூசு கவலை' என்றும் பாடம்.

(224)
  
     திணை : குறிஞ்சி.

     துறை : (1) இது, வன்புறை எதிரழிந்தது.

     (து - ம்.) என்பது, தலைமகன் பிரிதலானே வருந்திய தலைமகளைத் தோழி, 'நீ வருந்தாதேகொள்; அவர் இப்பொழுதே வருவர்' என்று வலியுறுத்திக் கூறப் பின்னும் ஆற்றாளாய்த் தோழியை நோக்கித் தோழீ! நாடனது மார்பை நாம் போய் இரந்தோமோ? இல்லையே: அவன் தானே வந்து தலையளிசெய்து, இப்பொழுது துன்புறுத்துகின்றானே யென்று எதிரழிந்து கூறாநிற்பது.

     (இ - ம்.) இதற்கும் முற் செய்யுட்கோதிய விதியே யமையும்.