(து - ம்.) என்பது, தலைமகன் தான் வினைவயிற்பிரிதலைத் தோழிக்குரைப்ப அவள் சென்று தலைமகட்குணர்த்தி மீண்டுவந்து தலைமகனைத் தொழுது நீயிர் செல்லுகிறீரென்றும் செல்லாதுறைகுவீரென்றும் கூற அஞ்சுவேன், ஆதலால் சென்று வினைமுடித்து விரைந்து வருவீராக; வாடை வந்து நின்றதனைக் கண்டீரல்லீரோவென உடன்பட்டுக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதனைப் ''பிரியுங்காலை எதிர்நின்று சாற்றிய மரபுடை எதிரும் உளப்படப் பிறவும்'' என்புழிப் பிற (தொல். கள. 23) என்ற தன்கண் அமைத்துக்கொள்க.
துறை : (2) செலவழுங்குவித்ததூஉமாம்.
(து - ம்.) என்பது, தலைவன் வினைவயிற்செல்லுதலை உடன்படாது முற்கூறியபடியே தடுத்துக்கூறியதுமாகும்.
(உரை இரண்டற்கு மொக்கும்.) (இ - ம்.) இதனை, முன் துறைக்குக் காட்டிய நூற்பாவின்கண் வரும் ''மரபுடையெதிரும்'' என்பதனால் அமைத்துக் கொள்க.
| சேறும் சேறும் என்றலின் பலபுலந்து |
| செல்மின் என்றல் யானஞ் சுவலே |
| செல்லா தீமெனச் செப்பிற் பல்லோர் |
| நிறத்தெறி புன்சொலின் திறத்தஞ் சுவலே |
5 | அதனாற்,செல்மின் சென்றுவினை முடிமின்சென்றாங்கு |
| அவண்நீ டாதல் ஓம்புமின் யாமத்து |
| இழையணி ஆகம் வடுக்கொள முயங்கி |
| உழையீ ராகவும் பனிப்போள்; தமியே |