| கண்டூர்பு விரிந்த கனையிருள் நடுநாள் |
| பண்பி லாரிடை வரூஉம் நந்திறத்து |
5 | அருளான் கொல்லோ தானே கானவன் |
| வெறிகொள் சாபத்து எறிகணை வெரீஇ |
| அழுந்துபட விடரகத்து இயம்பும் |
| எழுந்துவீழ் அருவிய மலைகிழ வோனே. |
(சொ - ள்.) தோழி கானவன் சிறுபுறம் கடுக்கும் பெருங்கை வேழம் - தோழீ! கானகத்து வாழும் வேட்டுவனது முதுகுபோன்ற பெரிய துதிக்கையையுடைய களிற்றியானை; வெறிகொள் சாபத்து எறிகணை வெரீஇ விடர் அகத்து அழுந்து பட இயம்பும் - அச்சங்கொண்ட வில்லினின்று எய்யுங்கணைக்கு அஞ்சி (ஓசையானது) மலைப்பிளப்பின் ஆழத்தே சென்று மோதுமாறு பிளிற்றா நிற்கும்; எழுந்து வீழ் அருவிய மலைகிழவோன் - குதித்து விழுகின்ற அருவியையுடைய மலைக்குரிய நங்காதலன்; மின்னு வசிபு அதிர்குரல் எழிலி - மின்னலாலே இருளைப் பிளந்துகொண்டு முழங்குகின்ற குரலையுடைய மேகம்; முதிர் கடன் தீரக் கண் தூர்பு விரிந்த கனை இருள் நடுநாள் - தான் சூன்முதிர்த லுடைமையால் அக்கடன் தீருமாறு கண்ணொளி மறையும்படி பரத்தலினாலே செறிந்த இருளையுடைய நடுயாமத்தில்; பண்பு இல்ஆர் இடை வரூஉம் நந்திறத்து அருளான் கொல்லோ - இயல்பு இல்லாத அரிய வழியில் வந்து எம்மாட்டு அருளுதல் செய்யானோ?; என் எனப் படுமோ - இப்பொழுது அவன் வந்து தலையளி செய்யாதிருத்தற்குக் காரணந்தான் என்னென்று சொல்லப்படுமோ? எ - று.
(வி - ம்.) வெறி - அச்சம்; பல ஒன்றோடொன்று மயங்கிக் கிடந்தமையின் வெறிகொள்கணையெனவுமாம். வசிபு - பிளந்து; வசிதல் - பிளத்தல். கடன்தீர்த்தல் - தன் கடமையைச் செய்து தீர்த்தல். ''யார் கடன் வைத்தாலும் மாரி கடன் வையாது'' என்னும் பழமொழியை நோக்கியுமறிக. வரூஉ : வந்து என்னும் இறந்தகால வினையெச்சத்திரிபு.
ஆற்றது ஏதத்துக்குக் கவலுகின்றாளாதலின் 'இனித் தாழ்க்காது யாம் வரைவொடு செல்லுதும்' எனக் கருதுவனெனக்கொண்டு என்னெனப் படுங்கொலென்றாள்.
உள்ளுறை:- யானை, வேட்டுவன் கணைக்கு வெருவி விடரகத்து முழங்குமென்றது தலைவி ஏதிலாட்டியர்கூறும் பழிச்சொல்லுக்கஞ்சி மனையகத்துப் புலம்பி வருந்தாநிற்குமென்றதாம். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - வரைவுடன்படுத்தல்.