பக்கம் எண் :


397


     திணை : மருதம்.

     துறை : இது, தோழி வாயில்மறுத்தது.

     (து - ம்.) என்பது, பரத்தையிற் பிரிந்துவந்த தலைமகன் வாயில் வேண்டிச் சென்றானைத் தோழி நோக்கி ஊரனே ! என்னைக் கைவிட்டுப் பரத்தைக்கே அருள்செய்வாயாக, நின்னைக் காணும்போழ்து இனிமையாயிருக்கின்ற அவ்வொன்றே யெனக்கு அமையுமென மறுத்து வெகுண்டு கூறாநிற்பது.

     (இ - ம்.) இதற்கு, ''நீத்த கிழவனை நிகழுமாறு படீஇக், காத்த தன்மையிற் கண்ணின்று பெயர்ப்பினும்'' (தொல். கற். 9) என்னும் விதியின்கண் அமைத்துக்கொள்க.

    
முயப்பிடிச் செவியின் அன்ன பாசடைக்  
    
கயக்கணக் கொக்கின் கூம்புமுகை அன்ன  
    
கணைக்கால் ஆம்பல் அமிழ்துநாறு தண்போது  
    
குணக்குத்தோன்று வெள்ளியின் இருள்கெட விரியும்  
5
கயற்கணங் கலித்த பொய்கை ஊர  
    
முனிவில் பரத்தையை என்துறந்து அருளாய்  
    
நனிபுலம்பு அலைத்த வேலை நீங்கப்  
    
புதுவறங் கூர்ந்த செறுவின் தண்ணென  
    
மலிபுனல் 1 பரத்தந் தாஅங்கு  
10
இனிதே தெய்யநின் காணுங் காலே.  

     (சொ - ள்.) முயப்பிடிச் செவியின் அன்ன பாசடை கயக்கணக் கொக்கின் கூம்பு முகை அன்ன கணைக் கால் ஆம்பல் - நெருங்கிய பிடியானையின் செவிபோன்ற பசிய இலையையும் குளத்தின்கணுள்ள அழகிய கொக்குப் போலக் கூம்பிய முகையையும் அவற்றிற்கொத்த திரண்ட தண்டினையுமுடைய ஆம்பலின்; அமிழ்து நாறு தண் போது குணக்குத் தோன்று வெள்ளியின் இருள்கெட விரியும் கயல் கணம் கலித்த பொய்கை ஊர - அமிழ்து நாறும் மெல்லிய மலர் வைகறையிலே கீழ்த்திசையின் கண்ணே தோன்றுகின்ற வெள்ளியைப் போல இருள்கெட மலராநிற்கும் கயல்மீன் கூட்டஞ் செருக்கிய பொய்கையையுடைய ஊரனே!; என் துறந்து முனிவு இல் பரத்தையை அருளாய் - என்னைக் கைவிட்டுச் சிறிதும் நின்பால் சினங்கொள்ளாதிருக்கின்ற பரத்தையைத் தலையளிசெய்து ஆண்டுறைவாயாக! யான் நின்பால் வெகுட்சி கொண்டுடைமையால் நின்னால் எஞ்ஞான்றும் தலையளி செய்யத் தக்கேன் அல்லேன்;

 (பாடம்) 1. 
பரத்தந் தாங்கு இனிது.