பக்கம் எண் :


398


நனி புலம்பு அலைத்தவேலை நீங்கப் புது வறங்கூர்ந்த செறுவின் - கோடையாலே மிகத் துன்பப்பட்டகாலை அக் கோடை வெப்பம் நீங்குமாறு புதுவதாக வற்றிக்காய்ந்து வெடிப்புமிக்க வயலிலே; தண் என மலி புனல் பரத்தந்து ஆ அங்கு - குளிர்ச்சியுற நிறைந்த புதுநீர் வெள்ளம் பரவினாற்போல; நின் காணுங்கால் இனிது - வந்த நின்னைக் காணும்பொழுதெல்லாம் இனிமையாகவேயிரா நின்றது; அக்காட்சியொன்றே போதும்! ஆதலின் என் மனையின்கண்ணே வாராதேகொள்! எ - று.

     (வி - ம்.) முயத்தல் - நெருங்கல்: முயா என்னும் குறியதனிறுதிச் சினைகெட்டு உகரம்பெறாதுநின்றது. கணை - திரட்சி. தெய்ய: அசைநிலை. இது தலைவியைத் தானாக்கூறியது.

     நயந்து தலைவனைப் பிணித்தலின் முனிவில் பரத்தையை யென்றாள். இஃது அவன்வயிற் பரத்தைமையன்று. இங்கு வருதலுஞ்செய்யாய் என்றிருந்தேமுக்கு நீ வந்ததே முயக்கத்தினுங்காட்டிற் சிறந்ததாகக் கொண்டு மகிழுவேமென்னுங் கருத்தால் நின்னைக்காணுங்கால் இனிதே என்றாள். இது வாராது தாழ்த்தனையென்று இகழ்ந்ததாயிற்று.

     இறைச்சி :- ஆம்பலம்போது வெள்ளிபோல மலர்ந்திருந்தாலும் வெள்ளியாகாதவாறுபோல, நீ தலைவிக்குச் செய்யுந் தலையளிபோலப் பரத்தைக்குச் செய்யினும் அவள் தலைவியாந்தன்மையளல்லள் காண் என்றதாம். மெய்ப்பாடு - வெகுளி. பயன் - வாயின்மறுத்தல்.

     (பெரு - ரை.) ''கயக்கணக் கொக்கின் அன்ன கூம்புமுகை'' எனவும் 'நனிபுலம் பலைத்த வெல்லை நீங்க' எனவும் பாட வேற்றுமைகள் உண்டு. இப்பாடங்களே சிறப்புடையனவுமாகும். வறங்கூர்ந்த செறுவில் தண்ணென மலி புதுப்புனல் பரத்தந்தாங்கு என இயைத்துக் கோடல் இனிதாம். முனிவில் பரத்தை என்றது தலைமகள் நின்பாற் பெரிதும் ஊடலுடன் இருக்கின்றாள் அவள் நின்னை ஏற்றுக்கொள்ளாள் காண் என்பதைக் குறிப்பாலுணர்த்தியபடியாம். நிற்காணுங்கால் இனிது என்றது இகழ்ச்சி. அமிழ்து நாறும் ஆம்பல் குணக்குத் தோன்றும் வெள்ளியின் இருள்கெடவிரியும் என்ற வுவமை நினைந்து நினைந்து இன்புறற்பாற்று.

(230)
  
     திணை : நெய்தல்.

     துறை : இது, சிறைப்புறமாகத் தோழி சொல்லி வரைவுகடாயது.

     (து - ம்.) என்பது, தலைவன் சிறைப்புறத்தா னாதலையறிந்த தோழி அவன் இன்றி அமையாமையாலே, தாம் வருந்துவதனை அறிவுறுத்தி விரைந்து வரையுமாற்றானே தலைவியை நோக்கி நம் கொண்கன் செய்த காதல் நம்மைவிட்டு நீங்காமையாலே துறை நோக்குதற்கு வருத்தமாயிராநின்றதென வரைவுதோன்றக் கூறாநிற்பது.

     (இ - ம்.) இதனை ''களனும் பொழுதும்.............அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்'' (தொல். கள. 23) என்னும் விதியினால் அமைத்துக்கொள்க.