(து - ம்.) என்பது, தலைமகன் பொருள்வயிற் பிரியக் கருதியதறிந்து வருந்துகின்ற தலைவியை 'நீ மெல்லிய அடியுடையை, காடுகள் கொடியவாதலின் நின்னுடன் செல்லுஞ் செலவு இப்பொழுது தவிர்ந்தனம், கார்காலத்து நின்னைப் பிரியவே இயலாதாகலின், அப்பொழுதுந் தவிர்ந்தன'மென அவளாற்றும் வண்ணந் தலைமகன் கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "மரபுநிலை திரியா மாட்சிய வாகி விரவும் பொருளும் விரவும்" (தொல். அகத். 45) என்பதனான் அமைத்துக் கொள்க.
| நீயே பாடல் சான்ற பழிதபு சீறடிப் |
| பல்குறப் பெருநலத்து அமர்த்த கண்ணை |
| காடே, நிழல்கவின் இழந்த அழல்கவர் மரத்த |
| புலம்புவீற் றிருந்து நலஞ்சிதைந் தனவே |
5 | இந்நிலை தவிர்ந்தனம் செலவே வைந்நுதிக் |
| களவுடன் கமழப் பிடவுத்தளை அவிழக் |
| கார்செயல் செய்த காமர் காலை |
| மடப்பிணை தழீஇய மாஎருத்து இரலை |
| காழ்கொள் வேலத் தாழ்சினை பயந்த |
10 | கண்கவர் வரிநிழல் வதியுந் |
| தண்படு கானமுந் தவிர்ந்தனஞ் செலவே. |