(து - ம்.) என்பது, பொருள்வயிற் பிரிந்தான் குறித்த பருவத்து வாராமையால் அதுகாறும் ஆற்றியிருந்து பின்பு ஆற்றாளாகிய தலைவியைத் தோழி வலிதிற் பொறுத்திரு வென்றாட்குத் தலைவி "குளிர்காலத்து அவர் நம்மிடத்தில் இருப்பவும் நாம் வருந்தித் துயிலாததனை அறிந்த காதலர் இப்பொழுது கைவிட்டதனால் அன்பிலர்கா"ணென அழிந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "கொடுமை யொழுக்கம் தோழிக் குரியவை . . . .ஆவயின் வரூஉம் பல்வேறு நிலையினும்" (தொல். கற். 6) என்பதனால் அமைத்துக் கொள்க.
துறை : (2) ஆற்றாளெனக் கவன்றதோழி தலைமகட்குரைத்ததூஉமாம்.
(து - ம்.) என்பது, வெளிப்படை. (உரை இரண்டதற்கு மொக்கும்.)
(இ - ம்.) இதனை, "பிறவும் வகைபட வந்த கிளவி" (தொல். கற். 9) என்பதன்கண் அமைத்துக் கொள்க.
| மாசில் மரத்த பலியுண் காக்கை |
| வளிபொரு நெடுஞ்சினை தளியொடு தூங்கி |
| வெல்போர்ச் சோழர் கழாஅர்க் கொள்ளும் |
| நல்வகை மிகுபலிக் கொடையோடு உகுக்கும் |
5 | அடங்காச் சொன்றி அம்பல் யாணர் |
| விடக்குடைப் பெருஞ்சோறு உள்ளுவன இருப்ப |
| மழையமைந்து உற்ற மாலிருள் நடுநாள் |
| தாம்நம் உழைய ராகவும் நாம்நம் |
| பனிக்கடு மையின் நனிபெரிது அழுங்கித் |
5 | துஞ்சாம் ஆகலும் அறிவோர் |
| அன்பிலர் தோழிநங் காத லோரே. |
(சொ - ள்.) தோழி நம் காதலோர் - தோழீ! நம் காதலர்; மாசு இல் மரத்த பலி உண் காக்கை - மாசற்ற மரத்திலுள்ளனவாகிய மக்களிடுபலியை உண்ணுங் காக்கை; வளி பொரு நெடுஞ்சினை தளியொடு தூங்கி - காற்று மோதுகின்ற நெடிய கிளையில் தன்மேல் விழுகின்ற மழைத்துளியுடனே அசைந்து கொண்டு; வேல் போர்ச் சோழர் கழாஅர்க் கொள்ளும் - வெல்லுகின்ற போரையுடைய சோழரது 'கழாஅர்' என்னும் பதியிலே கொள்ளப்படுகின்ற;