என்று என்னை ஆற்றுகின்றனை; பழனயாமைப் பாசு அறைப் புறத்துக் கழனி காவலர் சுடு நந்து உடைக்கும் - வயலிலுள்ள யாமையின் பசிய கற்போன்ற முதுகிலே அவ்வயலைக் காவல் செய்யும் மள்ளர் தாம் சுடுகின்ற நத்தையை உடைத்துத் தின்னாநின்ற; தொன்றுமுதிர் வேளிர் குன்றூர் அன்ன - பழைமை முதிர்ந்த வேளிருடைய குன்றூர்போன்ற; என் நல்மனை நனி விருந்து அயரும் கைதூவு இன்மையின் - எனது நல்ல மனையின் கண்ணே வருகின்ற மிக்க விருந்தினரை உபசரித்தலிற் கையொழியாமையால்; எய்தாமாறு புலவேன் - அவனை எதிர்ப் படப் பெற்றிலேன்; அதனாலே புலவாது வைகினேன்; அன்றேல் புலவி கூர்தலின் இங்கு வர ஒல்லேன் கண்டாய்! எ - று.
(வி - ம்.)பரத்தமை - அயலாந் தன்மை; தன்னின் வேறாயொழுகுந் தன்மை. பாசறை - பசியகல், கைதூவல்-கையொழிதல். கைதூவின்மை - கை யொழியாமை. துடுமெனல் : ஒலிக்குறிப்பு.
உள்ளுறை :-கொக்கினால் உதிர்ந்த பழம் ஆம்பற்பொய்கையிலே துடுமென விழுமென்றது பரத்தையாலிகந்து விடப்பட்ட தலைமகன் விரைந்து நின்னை வாயிலாகக் கொண்டு இங்கு வாராநின்றன் போலும் என்றதாம்.
இறைச்சி :- நாட்டுக் கடைஞராயுள்ளார் சிறப்பில்லாத நத்தை ஊனைத் துப்புடைய ஆமையின் புறத்து உடைத்துத் தின்பரென்றதனால் தலைமகன் சிறப்புடைய தலைமகளை இகழ்ந்து வருத்தமுற விட்டுச் சிறப்பில்லாத பரத்தையரை நலனுகரு மென்றதாம். இப்பொருள் :- "வேட்டொழிவ தல்லால் விளைஞர் விளைவயலுள், தோட்ட கடைஞர் சுடுநந்து - மோட்டாமை, வன்புறத்து மீதுடைக்கும் வச்சத் திளங்கோவை, யின்புறுத்த வல்லமோ யாம்" என வச்சத் தொள்ளாயிரத்தும் எடுத்தாண்டமை யறிக. மெய்ப்பாடு - வெகுளி. பயன் - வாயில் மறுத்தல்.
உரை :-(2) ஊரன் வேறாயொழுகுந் தன்மையைக் கருதிப் புலவாதே கோளென்றனை; அவன் என்பால் எய்துவது எஞ்ஞான்றும் அரியதாய் இருத்தலால் புலந்தால் முற்றும் வெறுக்குமோ வென்று என்றும் புலவேன் என்றதாம். உள்ளுறை இறைச்சி இதற்கு மொக்கும். மெய்ப்பாடு - உவகை. பயன் - மகிழ்தல்.
(பெரு - ரை.) முதல் துறைக்கு ஊரன் பரத்தமைக்குப் புலவாதே கொள் என்று வாயில் வேண்டிய தோழிக்கு யான் அவனைப் புலவேன்காண் விருந்து அயரும் கைதூவு இன்மையின் யாம் அவனை எய்தாம். அவனை மீண்டும் சேரிக்கே செல்லவிடுக என மறுத்தாள் எனப்பொருள் கொள்க.
இரண்டாவது துறைக்கு தலைவன் பரத்தமைக்குப் புலவாதே அவனை ஏற்றக்கொண்டனை இஃது அறிவோ? என்று கழறிய தோழிக்கு யாம் எற்றாற் புலவேமாயினேம் எனின் விருந்து அயருதலின்கண் அவனோடு ஊடிக்கொள்ள ஒழிவின்மையானே ஊடல் எய்தாம் ஆயினேம் என நுண்ணிதிற் பொருள் கொள்க.
(280)