பக்கம் எண் :


478


     திணை : மருதம்.

     துறை : (1) இது வாயில்வேண்டிச் சென்ற தோழிக்குத் தலைமகள் மறுத்து மொழிந்தது.

     (து - ம்.) என்பது, பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகன் தலைவியின் ஊடல் தணியவேண்டி வாயிலாகவிடுப்ப வந்த தோழி துறைவனை வெறாதே என்றாட்கு 'என்மனை வயின் வந்த விருந்துகளை ஓம்புதலானே கையொழியாமையின் அவனை எதிர்ப்படப் பெற்றிலேன், ஆதலிற் புலவேன்; அன்றேல் புலந்துகொள்வே னென'வெகுண்டு கூறாநிற்பது.

     (இ - ம்.) இதனை "தோழிக் குரியவை . . . . . ஆவயின் வரூஉம் பல்வேறு நிலையினும்" (தொல். கற். 6) என்பதனால் அமைத்துக் கொள்க.

     துறை : (2) தலைமகனை ஏற்றுக்கொண்டு வழிபட்டாளைப் புகழ்ந்து புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉமாம்.

     (து - ம்.) என்பது, வெளிப்படை.

     (இ - ம்.) இதுவுமது.

    
கொக்கினுக்கு ஒழிந்த தீம்பழங் கொக்கின் 
    
கூம்புநிலை அன்ன 1 முகையை ஆம்பல் 
    
தூங்குநீர்க் குட்டத்துத் துடுமென வீழும் 
    
தண்துறை ஊரன் தண்டாப் பரத்தமை 
5
புலவாய் என்றி தோழி புலவேன் 
    
பழன யாமைப் பாசறைப் புறத்துக் 
    
கழனி காவலர் சுடுநந்து உடைக்கும் 
    
தொன்றுமுதிர் வேளிர் குன்றூர் அன்னஎன் 
    
நன்மனை நனிவிருந்து அயரும் 
5
கைதூவு இன்மையின் எய்தா மாறே. 

     (சொ - ள்.) தோழி கொக்கினுக்கு ஒழிந்த தீம் பழம் - தோழீ! கொக்கு வந்திருந்ததனால் கிளை அசைதலின் உதிர்ந்த இனிய மாங்கனியானது; கொக்கின் கூம்பு நிலை அன்ன முகைய ஆம்பல் தூங்கு நீர்க்குட்டத்துத் துடும் என வீழும் - கொக்கினது குவிந்திருந்த நிலைபோன்ற அரும்புகளையுடைய ஆம்பல் மிக்க நிறைந்த ஆழமுள்ள நீரிலே 'துடும்' என வீழாநிற்கும்; தண் துறை ஊரன் - தண்ணிய துறைகளையுடைய ஊரனது; தண்டாப் பரத்தமை புலவாய் என்றி - அமையாத அயலாந்தன்மை ஆகிய செய்கையைக் கண்டு வைத்தும் 'நீ புலவாதே கொள்!'

 (பாடம்) 1. 
தகைய ஆம்பல்.