(து - ம்.) என்பது, தலைவன் பிரிவுக்காலத்து வருந்திய தலைவியை ஆற்றுவிக்குந்தோழி முன்பு தலைப்பெய்தவழி இத்தகைய அன்புடையனாதலின் அவன் அன்னதொரு குணக்குறைபாடிலன்; இன்று கரந்து பிரிந்தது ஒரு செயலின் மேலதுபோலுமென அவள் ஆற்றும் வகையைக் கருதிக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு "என்பு நெகப் பிரிந்தோள் வழிச்சென்று கடைஇ அன்புதலையடுத்த வன்புறைக்கண்ணும்" (தொல்-கள- 23) என்னும் விதிகொள்க.
(2) குறைநயப்புமாம்
என்பது, முன்பு தலைவனது குறையைத் தீர்ப்பதாக உடன்பட்ட தோழி தலைவியிடஞ் சென்று அவள் ஆராய்ந்தறியுமாறு குறிப்பாற் கூறாநிற்பது,
(இ - ம்.) இதற்கு, "மறைந்தவள் அருகத் தன்னொடும் அவளொடும் முதன் மூன்றளைஇப் பின்னிலை நிகழும் பல்வேறு மருங்கினும்" (தொல்-கள-23) என்னும் விதிகொள்க.
| என்கைக் கொண்டு தன்க ணொற்றியுந் |
| தன்கைக் கொண்டென் நன்னுதல் நீவியும் |
| அன்னை போல இனிய கூறியுங் |
| கள்வர் போலக் கொடியன் மாதோ |
5 | மணியென இழிதரும் அருவிப் பொன்னென |
| வேங்கை தாய வோங்குமலை யடுக்கத்து |
| ஆடுகழை நிவந்த பைங்கண் மூங்கில் |
| ஒடுமழை கிழிக்குஞ் சென்னிக் |
| கோடுயர் பிறங்கல் மலைகிழ வோனே, |
(சொ - ள்.) மணி என இழிதரும் அருவிப் பொன் என வேங்கை தாஅய ஓங்குமலை அடுக்கத்து - நீலமணிபோலத் தெளிந்து இழியும் அருவியையுடைய, பொன்போல வேங்கை மலர் உதிர்ந்த உயர்ந்த மலைப் பக்கத்தில்; ஆடுகழை நிவந்த பைங்கண் மூங்கில் - அசைகின்ற தண்டுயர்ந்த பசிய கணுக்களையுடைய மூங்கில்; ஓடுமழை கிழிக்கும் சென்னி கோடு உயர்பிறங்கல் மலைகிழவோன் - விசும்பின்கண் ஓடுகின்ற முகிலைக் கீழும் உச்சியையுடைய கொடுமுடிகள் உயர்ந்த பிறங்குதலாகிய மலைக்கு உரிமையுடைய நம் தலைவன்; என் கை தொண்டு தன் கண் ஒற்றியும் தன் கை கொண்டு என் நல் நுதல் நீவியும் அன்னை போல இனிய கூறியும் - முன்பு தலைப்பெய்த நாளிலே என் கைகளைத் தானெடுத்துத் தன் கண்களில் ஒற்றியும் தன் கைகளால் எனது நல்ல நெற்றியைத் தைவந்தும், அன்னைபோல இனிய பலவற்றைக் கூறியும் தலையளி செய்து இஞ்ஞான்று;