இல்லை-மறைத்து நாம் செய்த செயல் பிறிதொன்றுமில்லை; உண்டு எனின் பரந்து பிறர் அறிந்தன்றும் இலர் - அங்ஙனம் யாதேனும் செய்ததுண்டென்றால் அது பரவா நிற்கும், நிற்க. அதனைப் பிறர் அறிந்து வைத்தாருமிலர்; அன்னை கயம்தோறு இறவு ஆர் இனம் குருகு ஒலிப்ப சுறவு கழிசேர் மருங்கின் - அப்படியாக, அன்னை நம்மை நோக்கிப் பொய்கைதோறும் இறாமீனைத் தின்னும் குருகினம் ஒலிப்பச் சுறாவேறு மிக்க கழிசேர்ந்த இடத்து, கணைக்கால் நீடிக் கண்போல் பூத்தமை கண்டு - திரண்ட தண்டு நீண்டு நம்முடைய கண்களைப் போலப் பூத்தமை நோக்கியும்; நுண்பல சிறு பாசடைய நெய்தல் குறுமோ சென்று? எனக் கூறாதோள் - நுண்ணிய பலவாகிய பசிய இலைகளையுடைய சிறிய நெய்தன் மலரைப் (போய்ப்) பறித்துச் சூடிக்கொண்மின் எனக் கூறினாள் அல்லள்; நன்றும் எவன் குறித்தனள்-ஆதலின் அவள்தான் பெரிதும் என்ன கருதி யிருக்கின்றனள் போலும்; எ - று.
(வி - ம்.)கானல் - கடற்கரைச்சோலை. கயம் - பொய்கை. கணைக்கால் - திரண்ட தண்டு. குறுதல் - பறித்தல். நெய்தன்மலரைக் குறுமோ வெனக் கூறாளெனவே இற்செறிப்பறிவுறுத்ததாயிற்று. இது கரந்திடத் தொழிதல்.
நாளும் பறிக்கும்பூவைக் கொய்ம்மினென்னா ளென்றதனால் அன்னை சினமிக்குடையாளெனக் குறிப்பித்ததாம். எவன் குறித்தனளென்றதனால் நங்களவொழுக்கத்தைச் சிறிது அறிந்துடைமையிற் பிற கருதா நின்றன ளென்றதாம். இங்ஙனம் கூறவே இனி வரைந்தெய்தினாலன்றிக் காணுதல் இயலாதென வரைவுடன்படுத்தியதூஉமாம். மெய்ப்பாடு - அச்சத்தைச் சார்ந்த பெருமிதம் பயன் - செறிப்பறிவுறுத்து வரைவு கடாதல்.
(பெரு - ரை.) சென்றெனக் கூறாதோள் என்புழிச் சென்று என்னும் சொல்லைப் பிரித்து நீயும் யானும் சென்று எனக் கூட்டினர் போலும் உரையாசிரியர். நீயிர் சென்று குறுமோ என அமைத்தலே சிறப்பு.
இனி இதன்கண் கழியின்கண் இறவு ஆரும் குருகு ஒலிப்பச் சுறவு சேரும் மருங்கு என்றது. நீ ஈண்டு வருதலைக் கண்டு இவ்வூர் மகளிர் அலர் தூற்றாநிற்றலால் அன்னை ஐயுற்று இற்செறித்தனள் காண் எனக் குறிப்பாக வுணர்த்தினமையால் உள்ளுறையாதலை நுண்ணிதின் உணர்க. சுறவு தலைவனுக்குவமை. அதன் வருகையால் ஒலிக்கும் குருகினம் அலர் தூற்றும் மகளிர்க்குவமை. அதனால் அன்னை ஐயுற்றுத் தலைவியை இற்செறித்தனள் என்பது இவ்வுள்ளுறையாற் போந்த குறிப்பெச்சம் என்க.
(27)
திணை : பாலை.
துறை : (1) இது, பிரிவின்கண் ஆற்றாளாய தலைவிக்குத் தோழி சொல்லியது.