(து - ம்.) என்பது, பகற்குறி வந்தொழுகுந் தலைமகன் ஒருநாட் போந்து அற்றம் நோக்கி ஒருபுறத்து மறைந்திருத்தலைக் குறிப்பாலறிந்த தோழி, களவொழுக்கம் நீட்டியாது வரைந்துகொள்ள வேண்டித் தம்மை அன்னை இற்செறித்ததாக அவன் கருதுமாற்றால், யாதொரு பிழையுஞ் செய்யாத நம்மை நெய்தன்மலர் பறிக்கச் செல்லுமினோ வெனக் கூறுகின்றிலள்; அவ்வன்னை கருதியதுதான் யாதெனத் தலைவியை நோக்கிக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, "அனைநிலைவகையான் வரைதல் வேண்டினும்" (தொல்-கள- 23) என்னும் விதிகொள்க.
| நீயும் யானுந் நெருநற் பூவின் |
| நுண்தா துறைக்கும் வண்டினம் ஓப்பி |
| ஒழிதிரை வரித்த வெண்மண லடைகரைக் |
| கழிசூழ் கான லாடிய தன்றிக் |
5 | கரந்துநாஞ் செய்ததொன் றில்லை யுண்டெனிற் |
| பரந்துபிற ரறிந்தன்று மிலரே நன்றும் |
| எவன்குறித் தனள்கொ லன்னை கயந்தோ |
| றிறவா ரினக்குரு கொலிப்பச் சுறவங் |
| கழிசேர் மருங்கிற் கணைக்கால் நீடிக் |
10 | கண்போற் பூத்தமை கண்டு நுண்பல |
| சிறுபா சடைய நெய்தல் |
| குறுமோ சென்றெனக் கூறா தோளே. |
(சொ - ள்.) நெருநல் நீயும் யானும் பூவின் நுண் தாது உறைக்கும் வண்டு இனம் ஓப்பி. தோழீ ! நேற்றைப் பொழுதில் நீயும் யானும் சென்று மலரின் நுண்ணிய தாதிற் பாய்ந்து விழுகின்ற வண்டினங்களைப் போக்கி; ஒழிதிரை வரித்த வெள்மணல் அடைகரைக் கழிசூழ் கானல் ஆடியது அன்றி - ஒழிந்த திரை கொழித்த வெளிய மணலடுத்த கழிக்கரை சூழ்ந்த சோலையிடத்து விளையாடியதன்றி; கரந்து நாம் செய்தது ஒன்று