| பொன்பொதிந் தன்ன சுணங்கின் |
| இருஞ்சூ ழோதிப் பெருந்தோ ளாட்கே. |
(சொ - ள்.) செவ்வி சேர்ந்த புள்ளி வெள் அரை விண்டுப் புரையும் புணர்நிலை நெடுங்கூட்டு - அழகமைந்த புள்ளிகளையுடைய வெறுமையாகிய அடியையுடைய மலையை யொத்த அடுக்கிய நிலையமைந்த நெடிய நெற்கூட்டில்; பிண்ட நெல்லின் தாய்மனை ஒழிய - நிரம்பக் கொட்டிய நெல்லையுடைய தன் தாய்வீட்டைக் கைவிட்டு; சுடர் முழுது எறிப்பச் செழுங்காய் திரங்கி முடம் முதிர் பலவின் அத்தம் - ஆதித்த மண்டிலம் முற்றும் தன் வெயிலை வீசுதலானே செழுங்காய்கள் திரங்கப் பெற்று முடம்பட்ட முதிர்ந்த பலா மரங்கள் நிரம்பிய கொடிய காட்டில்; நும்மொடு கெடுதுணை ஆகிய தவறோ - நீயிர் தமியராய்ச் சென்று வருந்தாது நுமக்குத் துணையாக வந்த தவற்றினாலே தானோ?; வை எயிற்றுப் பொன் பொதிந்தன்ன சுணங்கின் இருஞ் சூழ் ஓதிப் பெருந்தோளாட்கு - கூரிய பற்களையும் பொன்னைப் பொதிந்து வைத்தாற் போன்ற சுணங்கையும் நெருங்கிய கரிய கூந்தலையும் பெரிய தோள்களையும் உடையாளுக்கு; வளை நெகிழ்ந்தன - இஞ்ஞான்று நீயிர் பிரிவேனென்றமையின் உடனே மெய் சோர்தலாலே கைவளைகள் கழன்று விழுந்தன; இப்பொழுதே இப்படியாயின் இனி மீண்டு வருந்துணையும் எங்ஙனம் ஆற்றியிருப்பள்?; யான் நோகு - இதற்கு யான் நோவா நின்றேன்; எ - று.
(வி - ம்.)புள்ளி - குதிரின் உறைக்கிடப்பட்ட எண்ணுதலமைந்த குறியீடு. வெள்ளரை - புரி முதலிய சுற்றாத வெறிய அடிக்கூண்டு; வெற்றிலையை வெள்ளிலையெனக் கூறுதலானுமறிக. கெடு துணை - உள்ளத்தெழுந்த அவாக்கெடுமாறு அருகுற்ற துணை - தோளாட்கு வளை நெகிழ்ந்தன எனக் கூட்டுக.
பிண்டநெல்லின் தாய்மனையென்றது தாய்வீடு செல்வமுதலியவற்றிற் குறைபாடில்லாதிருந்தும் அவற்றை யொருவி நும்பால்வந்தது நுமது இன்பமொன்றனையே கருதியன்றோ? அதனையும் பெறாதவாறு நீயிர் பிரிவீரெனின் இவளெங்ஙனமாற்றுமென்றதாம். கெடுதுணையாகிய தவறோ வென்றது அழிவில் கூட்டத்துப் பிரிவாற்றாமை. நெகிழ்ந்தன வளை யென்றது உடம்பு நனிசுருங்கல். கைகோள் கற்பு. மெய்ப்பாடு - பிறன்கட்டோன்றிய வருத்தம்பற்றிய இளிவரல். பயன் - செலவழுங்குவித்தல்.
(பெரு - ரை.) ஒருவர்க்குத் துன்பம் வருதற்கு அவர் செய்த தீவினையே காரணம் ஆம் என்பதுபற்றிச் செல்வமிக்க தாய்மனையை நீத்து வெயின் மிக்க காட்டின்கண் நினக்கு வாழ்க்கைத்துணையாகிவந்த தவற்றிற்குப் பயனாகப்போலும் இப்பொழுது அவள் உடன்மெலிந்து வளை நெகிழ்கின்றன என்று இரங்கியவாறு. இங்ஙனம் கூறவே பண்டு நீ அவளைக் களவிற் கேண்மை கொண்ட காலத்தே 'கடல் சூழ்மண்டிலம்