(து - ம்.) என்பது, தோழி தலைவனை நெருங்கி 'நீ பொருளீட்டிவருக'வென்று தூண்டுதலானே இயைந்த தலைமகன் காதலியையடைந்து ஆங்கு வருந்திய நெஞ்சினை நெருங்கி 'நெஞ்சமே, பொருள் வருவாயினையும் இவள் தோளின் பிரிவினையும் ஒருசேர நினைதலானே, நீ ஒரு வழியினுஞ் சென்றாய் அல்லை; தோழி கூறியபடி பொருள் கொணருமாறு யாம் செல்லின் ஆண்டு இவளை எதிர்காணவுமியையுமோ? இயையுமாயின் நீ சென்று காணென அழிந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "பண்பிற் பெயர்ப்பினும்" (தொல். கள. 13) என்னும் நூற்பாவின்கண் "ஆற்றிடையுறுதலும்" என்னும் விதியை இரட்டுற மொழிதல் என்னும் உத்தியான் தோழி பொருள் வலிப்பித்து வரைவிடை வைத்துப் பொருள்வயிற் பிரிவோன் ஆற்றிடை வருத்தமுற்றுக் கூறியது எனக் கொள்க. இதற்கு கைகோள் - களவென்க. இனி இதனைக் கற்புக் காலத்துப் பொருள்வயிற் பிரிவோன் "வேற்று நாட் டகல்வயின் விழுமம்" (தொல். கற். 5) உற்றுக் கூறிய கூற்றெனினுமாம்.
| வம்ப மாக்கள் வருதிறம் நோக்கிச் |
| செங்கணை தொடுத்த செயிர்நோக்கு ஆடவர் |
| மடிவாய்த் தண்ணுமைத் தழங்குகுரல் கேட்ட |
| எருவைச் சேவல் கிளைவயிற் பெயரும் |
5 | அருஞ்சுரக் கவலை யஞ்சுவரு நனந்தலைப் |
| பெரும்பல் குன்றம் உள்ளியும் மற்றிவள் |
| கரும்புடைப் பணைத்தோள் நோக்கியும் ஒருதிறம் |
| பற்றாய் வாழிஎம் நெஞ்சே நற்றார்ப் |
| பொற்றேர்ச் செழியன் கூடல் ஆங்கண் |
10 | ஒருமை செப்பிய அருமை வான்முகை |
| இரும்போது கமழுங் கூந்தல் |
| பெருமலை தழீஇயுநோக் கியையுமோ மற்றே. |
(சொ - ள்.) எம் நெஞ்சே - எமது நெஞ்சமே!; வம்ப மாக்கள் வருதிறம் நோக்கி - அயல் நாட்டு மாந்தர் நெறியில் வருகின்ற தன்மையை நோக்கி; செங்கணை தொடுத்த செயிர்நோக்கு