ஆடவர் - அவரைக் கொள்ளை கொள்ளும்பொருட்டுச் சிவந்த அம்பைச் செலுத்திய சினத்தொடு நோக்குகின்ற மறவருடைய; மடி வாய்த் தண்ணுமைத் தழங்குகுரல் கேட்ட எருவைச் சேவல் - தோலை மடித்துப் போர்த்த வாயையுடைய தண்ணுமையை முழக்கி எழுப்பும் ஓசையைக்கேட்ட பருந்தின் சேவல்; கிளைவயின் பெயரும் அருஞ்சுரக் கவலை - அச்சமுற்றுத் தன் சுற்றத்திடத்துச் செல்லாநிற்கும் சென்று சேர்தற்கரிய பாலைநிலத்தின்கணுள்ள கவர்த்த வழிகளையுடைய; அஞ்சுவரு நனந்தலைப்பெரும் பல் குன்றம் உள்ளியும் - கருதினவர்க்கு அச்சந்தோன்றுகின்ற அகன்ற இடத்தையுடைய பெரிய பலவாய குன்றுகளைப் பொருள்தேடும் விருப்பினாலே செல்ல நினைந்தும்; இவள் கரும்பு உடைப் பணைத்தோள் நோக்கியும் - இவளுடைய கரும்பு எழுதப்பெற்ற பருத்த தோளைப் பிரிய வேண்டியிருத்தலினால் அதனுக்கஞ்சி்ப் பலமுறை நோக்கியும்; ஒரு திறம் பற்றாய் - நீ ஒரு நெறியைக் கடைப்பிடித்து ஒழுகுவாயல்லை; நல் தாரப் பொன் தேர்ச்செழியன் கூடல் ஆங்கண் - நல்ல மாலை அணிந்த பொன்னாலாகிய தேரையுடைய பாண்டியனது மதுரையம்பதியிலே; ஒருமை செப்பிய அருமை - இவள் தோழி ஒருதன்மையாகப் பொருள்வயிற் செல்லும்படி உறுதிப்படுத்திக் கூறிய அருமையாகிய மொழியினால்; பெருமலை தழீஇயும் - யாம் பெரிய மலைநெறியைத் தழுவிய பின்னும்; வான்முகை இரும்போது கமழும் கூந்தல் நோக்கு இயையுமோ - வெளிய அரும்பு மலர்ந்த பெரிய மலரின் மணம்வீசும் கூந்தலையுடையாளைப் பார்ப்பதற்கு இயையுமோ? இயையு மாயின் பொருள்வயிற் பிரிந்து சென்று காண்; எ - று.
(வி - ம்.) நோக்க என்பதின் அகரம் தொகுக்கும் வழித்தொக்கது.இறைச்சி:- எருவைச் சேவல் தண்ணுமை யொலிக்கஞ்சித் தன் சுற்றத்திடத்துப் பெயர்ந்து செல்லா நிற்குமென்றது, யாம் பொருள்வயிற் சென்றாலும் ஈண்டு இவள்படும் ஏதத்தைக் கருதின் அஞ்சி மீண்டெய்துவாம் போலும் என்றதாம். மெய்ப்பாடு - பிறன்கண் தோன்றிய இளிவரல் பொருளாகப் பிறந்த அவலம். பயன் - இல்லத்தழுங்கல்.
(பெரு - ரை.) மலை தழுவிய பின்னரும் கூந்தலை யுடையாளை நோக்குதல் பொருந்துமோ என்று நெஞ்சைக் கடிந்தான் எனினுமாம். எனவே குன்றம் உள்ளுதலொழி இன்றேல் தோள் நோக்குதல் ஒழி இவற்றுள் ஒரு திறமே பற்றுக என்றானாம்.
(298)
திணை : நெய்தல்.
துறை : இது, தோழி தலைமகன் சிறைப்புறமாகச் சொல்லியது.