(து - ம்.) என்பது, தலைமகன் சிறைப்புறத்தானாதலை யறிந்த தோழி தான் சொல்லுவதனை அவன் அறிந்தவுடன் 'நாமின்மையின் இவருமிலர் போலும்' என நன்றாக அறிந்து விரைவின் மணம்புரிந்து கொள்ளும் வண்ணம் தலைவியை நெருங்கி 'நாம் களவி னியங்குவதறிந்து நம்முடைய சிறுகுடி என்ன துன்பம் எய்தினும் அவரே நம் தலைராவார்; அவரை மகிழ்ந்து கூடாத நாளில் நாமிருந்தும் இல்லாதேமாதலை யறிவோம்: அது கழிந்ததே'யென அழிந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, "களனும் பொழுதும் . . . . . . அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல். கள. 23) என்னும் விதி கொள்க.
| உருகெழு யானை உடைகொண் டன்ன |
| ததர்பிணி அவிழ்ந்த தாழை வான்புதர் |
| தயங்கிருங் கோடை தாக்கலின் நுண்தாது |
| வயங்கிழை மகளிர் வண்டின் தாஅங் |
5 | காமர் சிறுகுடி புலம்பினும் அவக்காண் |
| நாமிலம் ஆகுதல் அறிதும் மன்னோ |
| வில்லெறி பஞ்சி போல மல்குதிரை |
| வளிபொரு வயங்குபிசிர் பொங்கும் |
| நளிகடற் சேர்ப்பனொடு நகாஅ ஊங்கே. |
(சொ - ள்.) உருகெழு யானை உடைகொண்டு அன்ன - அச்சத்தைச் செய்கின்ற யானை நல்ல ஆடையை அணிந்து கொண்டாற் போன்ற; ததர் பிணி அவிழ்ந்த தாழை வான் புதர் - நெருங்கிய பிணிப்பு அவிழ்ந்த பெரிய தாழைப் புதரில்; தயங்கு இருங் கோடை தாக்கலின் நுண் தாது வயங்கு இழை மகளிர் வண்டின் தாஅம் - இயங்குகின்ற கடிய மேல் காற்று மோதுதலாலே நுண்ணிய மலரில் உள்ள தாதுக்கள் வயங்கிய கலன் அணிந்த மகளிருடைய வளைகள் உடைந்து உதிர்ந்தாற்போல உதிர்ந்து பரவாநிற்கும்; காமர் சிறுகுடி புலம்பினும் - அழகிய கடற்கரையிலுள்ள சிறிய நம்மூர் வருத்தமுறுவதாயினும்; அவக்காண் - அச் சேர்ப்பரே நந் தலைவர் காண்; வில் எறி பஞ்சி போல மல்கு திரை வளி பொரு வயங்கு பிசிர் பொங்கும் நளி கடல் சேர்ப்பனொடு - வில்லால் அடிபட்ட பஞ்சுபோல நிரம்பிய அலைகளிலே காற்று மோதுதலால் வயங்கிய பிசிர்கள் மிகுகின்ற நெருங்கிய கடற்கரையின் தலைவராகிய அச் சேர்ப்பரொடு; நகாஅ ஊங்கு நாம் இலம் ஆகுதல் அறிதும் மன் - மகிழ்ந்து கூடாத நாளில் நாம் இருந்தும் இல்லாதேம் போல ஆதலை அறியா நின்றோமன்றே? அங்ஙனம் ஆகியும் இப்பொழுது அவர் தொடர்பு கழிந்தது கண்டாய்; இஃதென்ன இன்னாமையுடையது? எ - று.