என்னை வருத்தாநிற்ப. அதனொடு நில்லாமே காட்டின்கண்ணே நண்பகலிற் புறவின் குரலைக் கேட்டு, அமர்த்த நோக்கத்தால் அவ் விடலை வருந்தவுஞ் செய்யுமோவென என்னுள்ளம் துயரம் எய்துவதேயென்றழிந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, "தன்னும் அவனும் அவளும் சுட்டி . . . . போகிய திறத்து நற்றாய் புலம்பலும்" (தொல். அகத். 36) என்னும் விதிகொள்க.
துறை : (2) மனைமருட்சியுமாம்.
(து - ம்.) என்பது, ஈன்ற தாய் மனையின்கண்ணே இருந்து மருண்டு சொல்லியதுமாம். (உரை இரண்டற்கு மொக்கும்.)
(இ - ம்.) இதுவுமது.
| வரியணி பந்தும் வாடிய வயலையும் |
| மயிலடி அன்ன மாக்குரல் நொச்சியும் |
| கடியுடை வியன்நகர் காண்வரத் தோன்றத் |
| தமியே கண்டதண் தலையுந் தெறுவர |
5 | நோயா கின்றேம் மகளைநின் தோழி |
| எரிசினந் தணிந்த இலையில் அம்சினை |
| வரிப்புறப் புறவின் புலம்புகொள் தெள்விளி |
| உருப்பவிர் அமையத்து அமர்ப்பனள் நோக்கி |
| இலங்கிலை வென்வேல் விடலையை |
10 | விலங்குமலை ஆர்இடை நலியுங்கொ லெனவே. |
(சொ - ள்.) மகள் வரி அணி பந்தும் வாடிய வயலையும் - மகளே! நின் தோழி விளையாடிய வரிந்து அணிந்த பந்தும் நீர்விடுவார் இன்மையாலே வாடிய அவளோம்பி வந்த வயலைக் கொடியும்; மயில் அடியன்ன மாக் குரல் நொச்சியும் - சிற்றில் கோலி விளையாடிய மயில் போன்ற இலையையும் கரிய பூங்கொத்தையும் உடைய நொச்சியும்; கடி உடை வியன் நகர்காண்வரத் தோன்ற - காவலையுடைய அகன்ற மாளிகையிடத்து எதிரே காணும்படி தோன்றாநிற்ப; தமியே கண்ட தண்டலையும் தெறுவர - அவளின்றித் தனியே கண்ட சோலையும் என்னை வருத்தாநிற்ப; நின் தோழி எரி சினம் தணிந்த இலை இல் அம்சினை வரிப்புறப் புறவின் புலம்புகொன் தெள்விளி - அவற்றொடு, நின் தோழி ஆதித்த மண்டிலம் கொதிப்புச் சிறிது அடங்கிய மாலையின் முற்படு பொழுதில் இலையுதிர்ந்த அழகிய மரக்கிளையில் இருந்து வரி பொருந்திய முதுகினையுடைய புறாவினது அச்சங்கொள்ளத்தக்க தெளிந்த கூவுதலானாகிய ஓசையைக் கேட்டு; உருப்பு அவிர் அமையத்து அமர்ப்பனள் நோக்கி - வெப்பமிக்க