பக்கம் எண் :


520


பொழுதின்கண் வருந்திப் போர் செய்யப் புகுந்தாற்போன்ற கண்ணையுடையாளாய் நோக்கி; இலங்கு இலை வென் வேல் விடலையை மலை விலங்கு ஆர்இடை நலியும் கொல் என - இலங்கிய இலைவடிவாகிய வெற்றி பொருந்திய வேற்படையை யேந்திய காதலனை மலை குறுக்கிட்ட அரிய நெறியிடத்தே துன்புறுத்துங்கொல்லோ? என்றே; நோய் ஆகின்றேம் - எனக்கு வருத்தம் உண்டாகா நின்றது; எ - று.

    (வி - ம்.) மகளை, ஐ : சாரியை. நலியுமோவென நோயாகின்று எனக் கூட்டுக.

    தன் புதல்வி காதலனொடு கலந்து இனிய வாழ்வெய்தக் கண்டால் இப்பொழுது அவளின்றிக் காணப்படும் பந்து முதலாயவற்றானெய்துந் துயரம் எல்லா மொருங்கே யகலும்; அவ்வண்ணமின்றி அவனை வெறுக்கச்செய்யின் இல்லறநிகழ்த்தற்கியலாது வருந்துமே என்பது கொண்டு பந்து முதலாய கண்டவழி எய்துந் துன்பமேயன்றி விடலையை நலியுங்கொலென்றும் இரங்கினாள். மெய்ப்பாடு - உவகைக் கலுழ்ச்சி. பயன் - ஆற்றாமை நீங்குதல்.

    (பெரு - ரை.) பாலைநிலத்தின்கண் பேதையாகலான் என்மகள் அஞ்சவேண்டாதனவற்றிற்கும் அஞ்சுமாற்றால் அவள் காதலனுக்குத் துன்பந் தருகுவளோ? என்று வருந்துகின்றேன் என்று கூறியபடியாம். எனவே தன் மகள் பாலை நிலத்தே உண்டாகும் பறவை விலங்கு முதலியவற்றின் ஒலி கேட்டே நடுங்குவளே! என்று இரங்கினாளாயிற்று. அங்ஙனம் அஞ்சினும் அவள் காதலன் அவட்கு ஏதம் உறாவண்ணம் ஓம்புவன் என்று ஒருவாறு நெஞ்சத்தே ஆறுதலும் கொள்வாள் அவனை 'இலங்கிலை வென் வேல் விடலை' என விதந்து கூறினாள்.

(305)
  
    திணை : குறிஞ்சி.

    துறை : (1)இது, புனமடிவுரைத்துச் செறிப்பறிவுறீஇயது.

    (து - ம்.) என்பது, தலைமகன் ஒருபுறமாக வந்து மறைந்துறைதலை அறிந்த தோழி, புனங்கொய்தலையும் தலைமகளை இல்வயிற்செறிப்பதனையும் அவன் அறிந்து விரைய மணம் புரிந்து கொள்ளும்படி கூறுவாளாகி நமர் தினைப்புனங் கொய்யலுறாநின்றனர்; அன்றி, இறைவியையும் மனையகங்கொண்டு புகுவாராயினார்; இனி, அவளை நமது புனத்தின் கண்ணே காணவும் இயையாதேயென நொந்துகூறாநிற்பது.

    (இ - ம்.)இதற்கு, "களனும் பொழுதும் . . . . . . அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல். கள. 23) என்னும் விதி கொள்க.

    துறை : (2) சிறைப்புறமுமாம்.

    (து - ம்.) என்பது, தலைமகன் சிறைப்புறத்தானாகக் கூறியதுமாகும். (உரை இரண்டற்குமொக்கும்.)