பக்கம் எண் :


521


    (இ - ம்.) இதுவுமது.

    
தந்தை வித்திய மென்தினை பைபயச் 
    
சிறுகிளி கடிதல் பிறக்கியா வணதோ  
    
குளிர்படு கையள் கொடிச்சி செல்கென 
    
நல்ல இனிய கூறி மெல்லக் 
5
கொயல்தொடங் கினரே கானவர் கொடுங்குரல் 
    
குலவுப்பொறை இறுத்த கோல்தலை இருவி 
    
விழவொழி வியன்களங் கடுப்பத் தெறுவரப் 
    
பைதல் ஒருநிலை காண வைகல் 
    
யாங்கு வருவது கொல்லோ தீஞ்சொல் 
10
செறிதோட்டு எல்வளைக் குறுமகள் 
    
சிறுபுனத்து அல்கிய பெரும்புற நிலையே. 

    (சொ - ள்.) குளிர்படு கையள் கொடிச்சி செல்க என நல்ல இனிய கூறி - 'கிளிகடி கருவி பொருந்திய கையையுடைய கொடிச்சியே! நீ மனையகம் புகுவாயாக!' என்று நல்ல இனிய மொழிகளை மொழிந்து; கானவர் மெல்லக் கொயல் தொடங்கினர் - கானவர் மெல்லத் தினைக் கதிரைக் கொய்யத் தொடங்கினர்; தந்தை வித்திய மெல் தினை பைபயச் சிறுகிளி கடிதல் யாவணது - ஆதலின் எம் தந்தை விதைத்த மெல்லிய தினையைக் கொய்துகொண்டு போமாறு மெல்ல மெல்ல வருகின்ற சிறிய கிளிகளை வெருட்டுதல் இனி எப்படியாகும்?; கொடுங்குரல் குலவுப் பொறை இறுத்த கோல் தலை இருவி விழவு ஒழி வியன்களம் கடுப்பத் தெறுவரப் பைதல் ஒரு நிலை - அங்ஙனம் வளைந்த கதிர்களாகிய குலவிய பொறையைக் கொய்தொழித்த கொம்பாகிய தலையுடைய தினைத்தாள்கள்தாம் திருவிழாச் செய்தொழிந்த அகன்ற அவ் விழாக்களம் போலப் பொலிவழிந்து எம்மை வருத்தாநிற்கையில் இவ் வண்ணம் கொல்லை அழிந்த தன்மையையும்; தீம் சொல் செறி தோட்டு எல் வளைக் குறுமகள் - இனிய சொல்லும் நெருங்கிய தொகுதியான ஒளி பொருந்திய வளையுமுடைய இளமையுற்ற எங்கள் தலைமகள்; சிறு புனத்து அல்கிய பெரும் புறநிலையே - முன்பு சிறிய தினைப் புனத்துப் பெரிய மேற்கூரை உடைய கட்டுப் பரணிலே நின்ற நிலைமையையும்; காண வைகல் யாங்கு வருவது கொல் - பார்க்கும் பொருட்டுக் காலையிலே தலைமகன் எப்படி வருதல் இயையுமோ? இயையாதே! எ - று.

    (வி - ம்.) பிறக்கு : அசைநிலை. பொறை - பாரம். இருவி - தினைத்தாள்.