பக்கம் எண் :


522


    கிளியோப்புதலில்லையாதலின் இனிப் புனத்து வந்து பகற்குறி கூடவும் இயையாதேயென்பாள், யாவணதென்றாள். செல்கவென்பதனால் இற்செறிப்பு அறுவுறுத்தினாள். இங்ஙனங் கூறவே வரைந்து கொள்கவென அறிவுறுத்தினாளுமாம். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - வரைவுகடாதல்.

    (பெரு - ரை.) பைதல் ஒரு நிலையையும் பெரும்புற நிலையையும் காண யாங்கு வருவது கொல் என இயைத்துக் கொள்க. பைதல் ஒரு நிலை - துன்பத்திற்குக் காரணமான ஒரு நிலைமை. 'சூற்பொறை இறுத்த', என்றும் பாடம். இனி, குறுமகள் அல்கிய பெரும்புற நிலையாகிய உவ்விடத்தே குரற்பொறை இறுத்த இருவி தெறுவரப் பைதல் ஒரு நிலையைக் காண யாங்கு வருவதுகொல் என்றியைத்தலே நேரிதாம். தலைவி நின்ற நிலைக்கண் இருவி நிற்றலையே காணவியலும்; அவளை இற்செறிப்பர் என்றுணர்த்தியபடியாம்.

(306)
  
    திணை : நெய்தல்.

    துறை : இது, குறிநீட ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி வற்புறுத்தியது.

    (து - ம்.) என்பது, தலைமகன் குறித்த குறியிடத்துவரப் பாணித்தமையால் அது பொறாது வருந்திய தலைவியைத் தோழி நோக்கி அங்கே தேரின் மணியொலி இசையாநிற்கும்; இளையரும் ஒலியாநிற்பர்; ஆதலின், நினது நலன் நுகரும்படி கொண்கன் இன்னே வருகுவன்காண்; வருகின்ற அவன்தான் நம்மைக் காணாது வருந்துவதை நாம் சிறிது பொழுது கண்டு மகிழும் வண்ணம் இங்குள்ள புன்னையடிமறைவில் மறைந்துகொள்வோம் வருவாயாகவென்று வலியுறுத்திக் கூறாநிற்பது.

    (இ - ம்.) இதற்கு, "என்புநெகப் பிரிந்தோள் வழிச்சென்று கடைஇ அன்பு தலையடுத்த வன்புறைக் கண்ணும்" (தொல். கள. 23) என்னும் விதி கொள்க.

    
கவர்பரி நெடுந்தேர் மணியும் இசைக்கும் 
    
பெயர்பட இயங்கிய இளையரும் ஒலிப்பர் 
    
கடலாடு வியலிடைப் பேரணிப் பொலிந்த 
    
திதலை அல்குல் நலம்பா ராட்டிய 
5
வருமே தோழி வார்மணற் சேர்ப்பன் 
    
இற்பட வாங்கிய முழவுமுதற் புன்னை 
    
மாவரை மறைகம் வம்மதி பானாள் 
    
பூவிரி கானல் புணர்குறி வந்துநம் 
    
மெல்லிணர் நறும்பொழிற் காணாதவன் 
10
அல்லல் அரும்படர் காண்கநாம் சிறிதே. 

    (சொ - ள்.) தோழி கவர்பரி நெடுந்தேர் மணியும் இசைக்கும் - தோழீ! செல்லுதலில் விருப்பமுடைய குதிரை பூட்டிய