பக்கம் எண் :


525


ஒன்றுபட்டுக் கரைந்து வேறுபாடின்றி அடங்கிற்றுமன், ஆதலின் இனிப் பிரிவதுதான் எவ் வண்ணமாகும்? எ - று.

    (வி - ம்.)இதனுள் ஆயிழை போற்றி நாணிவந்து செல்லாளாகித் தயங்கக் கலங்கி நினைந்து அடைந்தோளென வினையெச்ச அடுக்காகக் கொண்டு எழுவாய்க்கும் பயனிலைக்கும் இடையே கிடந்து பயனிலையை விசேடிக்கும் எச்சங்கள் உள்ளே ஒன்றனை முற்றாகக்கொண்டு திரித்துப் பாலும் இடமுங்காட்டி நிற்பச் செய்யுள் செய்தமை அறிக. தகைத்தலுஞ் செல்லாள்; ஒரு சொல்லாகக் கொள்க.

    தான் அன்பின் மிகுதியாற் பாராட்டினதுகண்டு நாணினமையின் அதனைக் கூறுவான்போன்று தன் அன்பைப் புலப்படுத்தினான். பாவையிற் கலங்கி ஆகமடைதந்தோளென அவளது அன்பின்மிகுதியும் அவட்குத் தானின்றியமையாமையுங் கூறினான். இருவரும் அன்பின் மேலீட்டினாற் கலந்து மகிழ்வதனினும் பொருள் சிறப்பிலதென்பான் 'பொருள்மலி நெஞ்சம் புணர்ந்துவந் தன்று' என்றான். மெய்ப்பாடு - பிறன்கட்டோன்றிய வருத்தம்பற்றிய இளிவரல். பயன் - இல்லத்தழுங்கல்.

    (பெரு - ரை.) இச் செய்யுட்கு ஆயிழை யாம் விரைவுற்ற அரவத்தை ஓர்ந்து தன் கண் நீர்வர நிற்றல் கண்டு யாம் அவளை ஆற்றுவித்தற் பொருட்டு அவளை அழைப்ப, அவள் நாணி எம்பால் வருகின்றவள்; எம்முடைய பிரிவை விரும்பாமையால் மென்மெல வந்து எம்மை ஏதும் வினவலும் தடைசெய்தலுஞ் செய்யாளாய்ப் பொறியழி பாவையிற் கலங்கி நினைந்து எம் ஆகத்தைத் தழீஇக் கொண்டனள்; அதுகண்டு எம் நெஞ்சம் புணர்ந்து உவந்தது; இனி யாம் எங்ஙனம் பிரிதலாற்றுவேம்? என்று பொருள்கோடல் நேரிதாம்.

(308)
  
    திணை : குறிஞ்சி.

    துறை : இது, வரைவுநீட ஆற்றாளெனக் கவன்று தான் ஆற்றாள் ஆகிய தோழியைத் தலைமகள் ஆற்றுவித்தது.

    (து - ம்.) என்பது, தலைவன் மணஞ்செய்துகொள்ள நீட்டித்தலானே தலைமகள் வருந்துவளே என்று கவலைகொண்டு தோழி ஆற்றாதிருத்தலை அறிந்த தலைமகள், அவளை நெருங்கி நின்னால் எனக்குத் தீங்குவந்ததென்று அழாதேகொள்; அவனது கேண்மை நமக்குத் துன்பமுடைத்தென நீ கூறாநிற்பை; அவருடைய நட்பினியல்பை நன்றாக அறிந்துள்ளேனாதலின் யான் பொறையொடு உறைவேனென அவள் தெளியும்படி கூறாநிற்பது.

    (இ - ம்.) இதனை, "உயிரினும் சிறந்தன்று நாணே . . . . .ஆவகை பிறவும் தோன்றுமன் பொருளே" (தொல். கள. 22) என்னும் நூற்பாவின்கண் பிற என்பதனால் அமைத்துக் கொள்க.

    
நெகிழ்ந்த தோளும் வாடிய வரியும் 
    
தளிர்வனப்பு இழந்தஎன் நிறனும் நோக்கி