பக்கம் எண் :


537


     (வி - ம்.) தெய்வம் - வருடம்; தெய்வத்துயாண்டு: இருபெயரொட்டு; அத்து: அல்வழிச் சாரியை. அம்பி - மரக்கலமுமாம். புகைகொடுத்தல் கழுது அணங்கிக் கடலிலே கெடுக்காதிருத்தற்பொருட்டு. விழுமிது - சிறப்புடையது. நொவ்விது - நுண்ணியது.

     தன்னையும் அவன் கைவிட்டுச் சேரிப் பரத்தையர் நலநுகர்ந்துறைதலின் எம்போலென்றாள்.

     உள்ளுறை:- அம்பி முதிர்தலும் புன்னையின் கீழ்க் கொண்டு போய்ப் பிணித்த தென்றது, முன்பு நின்னை யடைந்த மாதர் பலருஞ் சிறிது முதிர்தலும் அவரைப் பாதுகாவாது இவ்வயின் விடுத்தொழிந்தனை யென்றதாம்.

     நின்னை நயந்தோர் மலர்தீய்ந்தனைய ரென்றது, இவளும் முதிர்ந்தால் அன்றோ ஏனையோரைப் போலக் கைவிடப்படுவாள், அங்ஙனமின்றி இவ் விளமையிலேயே நீ துறந்ததனால் எம்மைப்போல இவளும் மலர் முதிராது கருகிய தன்மையளாயினா ளென்பது. மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - ஊடல் தீர்த்தல்.

     (பெரு - ரை.) இச் செய்யுளை இத் துறைக்குக் காட்டிய ஆசிரியர் நச்சினார்க்கினியர் தரும் விளக்கம் வருமாறு:-

     "இதனுள் மூத்து வினைபோகிய அம்பிபோலப் பருவஞ் சென்ற பிணிக்கப்பட்ட எம்மைப் போலாது இவள் இப்பருவத்தே இனையள் ஆகற்பாலளோ? மலர்ந்த செவ்வியான் முறைவீயாய்க் கழியாது இடையே எரிந்து கரிவுற்ற பூவினைப் போலவெனத் தலைவனுக்குக் காமக் கிழத்தி கூறியவாறு காண்க; எனவரும் இனி, காலம் தெய்வத்தன்மை யுடையதாகலின் தெய்வத் தன்மையுடைய யாண்டு எனினுமாம். பார் - பாறைக்கல். பாறைக் கல்லையுடைய துறை என்க. இங்ஙனம் கூறியது புடையுண்டற்கு ஓர் ஏதுக் காட்டியபடியாம். 'பாயிரும் பனிக்கடல் பார்துகள்பட' என வரும் பரிபாடலினும் 5) அஃதப் பொருட்டாதலறிக. விழுமிதிற்கொண்ட கேண்மையின் இயல்பினையும் அதற்காகாத தவறுகளையும் (நொவ்விதின்) நுண்ணிதின் அறிந்து கோடல் வேண்டும். அங்ஙனம் அறியாயாயின் எனப் பொருள் கோடல் சிறப்பு. 'தவறுநற்கு அறியாயாயின்' என்றும், 'நடைவளம் வாய்த்தென' என்றும், 'நன்புகைகொண்டார்' என்றும், 'மலர் தீர்ந்தனையர்' என்றும் பாடவேறுபாடுண்டு.

(315)
  
    திணை : பாலை.

     துறை : இது, பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி வற்புறுத்தது.

     (து - ம்,) என்பது, தலைவன் பிரிதலால் வருந்திய தலைவியைத் தோழி 'நீ வருந்தாதே கொள்; முல்லை அரும்பும் பொழுது வருவேனென்று அகன்ற காதலர் மீண்டு வருமுன் அவை அரும்பும்படி வம்பமாரி பெய்யத் தொடங்கி இடி இடித்துவிட்டது; ஆதலால், இம் மேகம் அறியாமை யுடைய'தென வலி உறுத்திக் கூறாநிற்பது.