(து - ம்.) என்பது, ஆடவர் வண்டுபோல்வராதலின் அவர் வரும்பொழுது எதிர் தொழுது போம்பொழுது பின்னே தொழுவதன்றி அவர் செயலைக் குறித்துப் பெண்டிர் புலத்தல் தகாதெனத் தலைவிதானே யறிந்து புலவி நீங்குமாற்றானே தோழி பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகனோடு உறழ்ந்து கூற அவன் யாரையும் அறிந்திலேனென்றானை அப்பரத்தையர் பலர் நின்னைப் பற்றியிழுத்ததை யான் அறிவேன், அறிந்துவைத்தும் எவன் செயற்பாலேனெனச் செயலற்றுக் கூறா நிற்பது.
(இ - ம்.) இதற்கு, "பிழைத்து வந்திருந்த கிழவனை நெருங்கி, இழைத்தாங்கு ஆக்கிக் கொடுத்தற் கண்ணும்" (தொல்-கற்பி- 9) என்னும் விதிகொள்க.
| கண்டனென் மகிழ்ந கண்டெவன் செய்கோ |
| பாணன் கையது பண்புடைச் சீறியாழ் |
| யாணர் வண்டின் இம்மென இமிரும் |
| ஏர்தரு தெருவின் எதிர்ச்சி நோக்கிநின் |
5 | மார்புதலைக் கொண்ட மாணிழை மகளிர் |
| கவலே முற்ற வெய்துவீ ழரிப்பனி |
| காலே முற்ற பைதரு காலைக் |
| கடன்மரங் கவிழ்ந்தெனக் கலங்கி யுடன்வீழ்பு |
| பலர்கொள் பலகை போல |
10 | வாங்க வாங்கநின் றூங்கஞர் நிலையே. |
(சொ - ள்.) மகிழ்ந பாணன் கையது பண்பு உடைச் சீறி யாழ் யாணர் வண்டின் இம் என இமிரும் ஏர்தரு தெருவின் - மகிழ்ந ! பாணன் கையிடத்ததாகிய பண்பமைந்த சிறிய யாழ் அழகிய வண்டுபோல இம்மென ஒலியாநின்ற நீ எழுந்து வருகின்ற தெருவிலே; எதிர்ச்சி நோக்கி நின் மார்பு தலைக் கொண்ட மாண் இழை மகளிர் - நீ வருதலை எதிர்பார்த்து நின்மார்பை முன்பு தமக்குடையராய்ப் பற்றிக்கொண்டிருந்த மாட்சிமைப் பட்ட இழையை யணிந்த பரத்தையர் பலரும்: கவல் ஏமுற்ற வெய்து வீழ் அரிப்பனி - நீ பிரிந்ததனாலுண்டாகிய கவற்சி மிகுதலாலே கண்களினின்று வெப்பமாய் வடிகின்ற கண்ணீருடனே; கால் ஏமுற்ற பைதரு காலை கடல் மரம் கவிழ்ந்தென - கடிய புயற்காற்று வீசிச் சுழற்றுதலாலே துன்புற்ற காலத்துக் கடலிலே