மார்பு உரிதினில் பெறாது நல் நுதல் பசந்த படர்மலி அருநோய் - தண்ணிதாய்க் கமழ்கின்ற அகன்ற மார்பை உரிமையாகப் பெறாமையால் உண்டாகிய நல்ல நுதலிலே பசப்பெய்திய நினைத்தல் மிக்க நீங்குதற்கரிய இந் நோய்; அணங்கு என உணரக் கூறி - முருகவேள் அணங்கியதால் உளதாயிற்றென்று அன்னை அறியும்படி சொல்லி; வேலன் இன் இயம் கறங்கப் பாடி - படிமத்தான் (பூசாரி) தனது துடி முதலாய வாச்சியம் ஒலிக்கப் பாடி; பல் மலர் சிதறிப் பரவுறு பலிக்கு - பலவாய பூக்களைத் தூவித் துதித்து 'இவ் யாட்டினை ஏற்றுக்கொள்' ளென்று, அதனை அறுத்துக் கொடுக்கும் பலிக்காக; ஆங்ஙனம் தணிகுவது ஆயின் - அவ்வண்ணம் இந் நோய் தணிவதாயினோ; யாங்கும் இதனின் கொடியது பிறிது ஒன்று இல்லை - எவ்விடத்தும் இதனினுங் காட்டில் கொடியது பிறிதொன்று இல்லை கண்டாய்; வாய்கொல் - அவ்வண்ணம் தணியு மென்பது மெய்ம்மைதானோ? ஆமாயிற் கூறுவாய்; எ-று.
(வி - ம்.) வாய் - உண்மை. புழை - நுழைவழி. ஒற்றுதல் - அடுத்தல்.
உரிமையிற் பெறாததனாலே பசலைநோய் தோன்றியதென்பாள் வரைந்து உரிமையிற் பெறுமாறு அறிவுறுத்தினாள். நீடிப்பின் அன்னை வெறியெடுப்ப அதனால் இறந்துபாடெய்துமெனவும் அறிவுறுத்தினாளாயிற்று. இது, பசலை பாய்தல்.
உள்ளுறை:- பெண்புலியின் பசியைப் போக்க ஆண்புலி இரைதேடிப் பதிவிருக்குமென்றது, தலைவியின் படர்மலியருநோய் போக்கி வரைந்தெய்துமாறு தலைமகன் விரைவிலே பொருளீட்டச்சென்று பெற்றுவருவானாகவென்றதாம். மெய்ப்பாடு - மருட்கையைச் சார்ந்த பெருமிதம். பயன் - வரைவுகடாதல்.
(பெரு - ரை.) உயங்குபசி களைஇயர் என்றும், சிதறிப் பரவுறு என்றும் பாடமுண்டு.
(322)
திணை : நெய்தல்.
துறை : இது, தோழி இரவுக்குறி நேர்ந்தது.
(து - ம்.) என்பது, பகற்குறி இடையீடெய்திய தலைமகன் இரவுக்குறி விரும்பினானாக, அதுகேட்டு உடன்பட்ட தோழி குறியிடங் கூறுகின்றாள்; எமது சிறுகுடிப் பாக்கம் பனையின் கூட்டத்தின் நடுவணது; வண்டொலி மிகுதியால் நின் தேரொலி கேட்டலுமரிது; வருநெறியுமீதே யாதலால் மறவாது வருவாயாகவென இயைந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, "புணர்ச்சி வேண்டினும்" (தொல். கள. 23) என்னும் விதிகொள்க.