(து - ம்,) என்பது, பலகாலுங் களவுமேற்கொண்டு வந்தொழுகுந் தலைமகனைத் தோழி நெருங்கி, நாடனே! நீ எந்நாளும் வந்துமுயங்கியகன்றும் இன்னதனால் உண்டாயதென்று அறியவியலாதபடி இவள் கண்கள் பசப்பூரா நிற்கும்; அதனை நின்பால் உரை செய்யவும் வெள்குவேன்; இவள் இவ்வாறு துன்புறாதபடி மணந்து ஓம்புவாயாக என்று சூழ்ந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "களனும் பொழுதும் . . . . . அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல். கள. 23) என்னும் விதி கொள்க.
| கொழுஞ்சுளைப் பலவின் பயங்கெழு கவாஅன் |
| செழுங்கோள் வாங்கிய மாச்சினைக் கொக்கின் |
| மீன்குடை நாற்றந் தாங்கல்செல் லாது |
| துய்த்தலை மந்தி தும்மும் நாட |
5 | நினக்கும் உரைத்தல் நாணுவல் இவட்கே |
| நுண்கொடிப் பீரத்தின் ஊழுறு பூவெனப் |
| பசலை ஊரும் மன்னோ பன்னாள் |
| அறிஅமர் வனப்பினெங் கானம் நண்ண |
| உண்டெனும் உணரா வாகி |
10 | மலரென மரீஇ வரூஉம் இவள் கண்ணே. |
(சொ - ள்.) கொழுஞ் சுளைப் பலவின் பயங்கெழு கவா அன் செழுங் கோள் வாங்கிய மாச் சினை - கொழுத்த சுளையையுடைய பலாவின் பயன் மிக்க மலைப் பக்கத்தில் செழுமையாகிய காய் காய்த்துப் பருத்தலாலே தாங்கமாட்டாது வளைந்த கரிய கிளையிலே வந்து தங்கிய; கொக்கின் மீன் குடை நாற்றம் தாங்கல் செல்லாது - கொக்கானது மீனைக் கொணர்ந்து குடைந்து தின்னுதலால் உண்டாகிய புலவு நாற்றம் பொறுக்கவியலாது; துய்த்தலை மந்தி தும்மும் நாட - ஆங்குள்ள பஞ்சுபோன்ற தலையையுடைய மந்தி தும்மா நிற்கும் மலை நாடனே!; பல் நாள் அறி அமர் வனப்பின் எம் கானம் நண்ண உண்டு எனும் - பலநாளும் அறியப்படுகின்ற அமர்ந்த அழகுடைய எமது தினைப்புனத்தை நீ அடைதலுண்டெனினும்; உணரா ஆகி - இன்ன காரணத்தாலே தோன்றினவென்று நம்மால் உணரப்படாதனவாகி; மலர் என மரீஇ வரூஉம் இவள் கண் - நீல மலர் போலப் பொருந்திவரும் இவளுடைய கண்ணில்; நுண் கொடிப் பீரத்தின்