(து - ம்,) என்பது, மணஞ்செய்துகொள்வதாக மொழிந்து சென்ற தலைமகன் குறித்த பருவத்து வாராமையால், அது பொறாது வருந்திய தலைமகளைத் தோழி நெருங்கி மலைநாடன் உயர்பிறப்பினனென்பதை யறிந்தனம்; அவன் கூறிய மொழி பிறழான்காண்; முதல் மழை பெய்தவுடன் வருவேனென்றனன் ஆதலின் ஒருநாள் நம்மூரின் புனத்தில் மழை பெய்வதாக; பெய்த அன்றே வருவன் என வலியுறுத்துக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, "ஆங்கதன் றன்மையின் வன்புறை யுளப்பட" (தொல். கள. 23) என்னும் விதி கொள்க.
| கிழங்குகீழ் வீழ்ந்து தேன்மேல் தூங்கிச் |
| சிற்சில வித்திப் பற்பல விளைந்து |
| தினைக்கிளி கடியும் பெருங்கல் நாடன் |
| பிறப்புஓர் அன்மை அறிந்தனம் அதனால் |
5 | அதுவினி வாழி தோழி ஒருநாள் |
| சிறுபல் கருவித் தாகி வலன்ஏர்பு |
| பெரும்பெயல் தலைக புனனே இனியே |
| எண்பிழி நெய்யொடு வெண்கிழி வேண்டாது |
| சாந்துதலைக் கொண்ட ஓங்குபெருஞ் சாரல் |
10 | விலங்குமலை அடுக்கத் தானும் |
| கலம்பெறு விறலி ஆடுமிவ் வூரே. |
(சொ - ள்.) தோழி கிழங்கு கீழ் வீழ்ந்து தேன் மேல் தூங்கி - தோழீ! கிழங்குகள் கீழிறங்கித் தேனடைகள் மிகுதியாக மேலே வைக்கப்பட்டு; சில் சில தினை வித்திப் பல் பல விளைந்து - மிகச் சிலவாய தினைகளை விதைத்து அவை மிகப் பலவாக விளைதலும்; கிளி கடியும் பெருங்கல் நாடன் - அவற்றைக் கிளி கொய்து போகாதபடி ஓப்பிப் பாதுகாக்கும் பெரிய மலை நாடனுடைய; பிறப்பு ஓர் அன்மை அறிந்தனம் - பிறப்பு மிக உயர்வுடையதேயன்றி நம்மோடு ஒத்த ஒரு தன்மையதன்றென்பதை அறிந்தனம்; அதனால் அது இனி வாழி - அதனால் அப் பிறப்பு இனி என்றும் வாழ்வதாக! அத்தகைய உயர்பிறப்பினனாதலின் அவன் கூறியது பிறழான்காண்; இனியே எண்பிழி நெய்யொடு வெள் கிழி வேண்டாது - முதன் மழை பெய்தவுடன் வருவேன் என்றனன் ஆதலின், இனி எள்ளைப் பிழிந்தெடுக்கும்