பக்கம் எண் :


557


நெய்யையும் வெளிய கிழியையும் விரும்பிப் பெறாது; சாந்து தலைக்கொண்ட ஓங்கு பெருஞ்சாரல் விலங்கு மலை அடுக்கத்தானும் - சந்தனமரம் மிகுதியாகவுடைய உயர்ந்த பெரிய மலைச்சாரலிலே குறுக்கிட்ட மலையின் புறத்திருக்கும் பக்கமலையிடத்து; கலம் பெறு விறலி ஆடும் இவ் வூர்ப் புனன் - நன்கலம் பெற்ற விறலி கூத்தயரா நிற்கும் இவ் வூரிலுள்ள நம்முடைய தினைப் புனத்தில்; சிறுபல் கருவித்து ஆகி வலன் ஏர்பு பெரும் பெயல் ஒருநாள் தலைக - அந்த மேகம் சிறிய பலவாய மின்னல் முதலாய தொகுதிகளையுடையதாகி வலமாக எழுந்து பெரும் பெயலை ஒருநாள் பொழிந்து விடுவதாக; பெய்த அன்றே வருகுவனாதலின் நீ வருந்தாதே கொள்! எ - று.

     (வி - ம்.) விழுதல் - இறங்குதல்; "வள்ளிகீழ்வீழா" என்றார், (39) கலியினும். தூங்குதல் - தொங்குதல். விளைந்து என்பதை விளையவெனத் திரிக்க. ஓரன்மை - தன்மையல்லாமை. எண் - எள்ளு.

     உள்ளுறைகள்:- (1) கிழங்கு கீழ்வீழ்ந்து தேன்மேல் தூங்கி என்றது, அவன் நம்பால்வைத்த அன்பு கீழாக வேரூன்றி இறங்கி மேலே காணும்போதெல்லாம் தேனினும் இனிமை செய்கின்றதென்பது.

     உள்ளுறைகள்:- (2) சிற்சிலவித்திப் பற்பல விளைந்தென்றது, ஒரோ ஒருகால் இயற்கைப் புணர்ச்சியிலே நீ இன்பம்நல்க அதனைப் பெற்றான் ஆதலின், அதற்கீடாகப் பல்லாயிரம் நன்மையை நினக்கு அளிக்க நாடியிருப்பன் என்பது.

     உள்ளுறைகள்:- (3) கிளிகடியுமென்றது, அவ்வன்பு கெடாதபடி பாதுகாக்குமென்பது.

     உள்ளுறைகள்:- (4) எண்ணெய் கிழி வேண்டாது விறலி ஆடுமென்றது, அவன் பெருந்தகைமை நோக்கவே அருங்கல முதலாயின வேண்டாது நம் சுற்றத்தார் நின்னைக் கொடுக்க உடன்படுவரென்பது.

     மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - தலைவியை ஆற்றுவித்தல்.

     (பெரு - ரை.) ஒருநாள் பெரும்பெயல் தலைக என்புழி பெரும்பெயல் என்பதனை எழுவாயாக்கினுமாம். பெரும்பெயல் - பெரிய மேகம் என்க. விறலியர் பொதுவாக விரும்பிப் பெறுகின்ற எண்ணெயையும் வெண்கிழியையும் விரும்பிப்பெறாமல் செல்வச் சிறப்புடைமையானே நம்மூரின்கண் சிறப்பாக நன்கலத்தைப் பெற்று ஆடுகின்றாள் என்பது கருத்து. மலையடுக்கத்தானும் என்புழி உம்மை இழிவுசிறப்பு.

     விறலி மன்னர் அரண்மனையிற் பெறும் பரிசிலாகிய நன்கலத்தை இம் மலையடுக்கத்தும் பெற்று ஆடும் என்பது கருத்து. வன்புறையாகலின் இறைச்சியின்கண் 'கிழங்கு . . . . .நாடன்' என அன்புறுதகுந சுட்டினள். "அடுக்கிய கோடி பெறினுங் குடிப்பிறந்தார் குன்றுவ செய்தலிலர்." (குறள் (954) 'நாடன் பிறப்பு ஓரன்மை அறிந்தனம்' என்றாள்.

(328)