(து - ம்,) என்பது, தலைமகன் வினைவயிற் பிரிதலால் மெலிவடைந்த தலைமகள் வருந்தலும் அதுகண்ட தோழி நெருங்கிக் காதலர் நம்மையகன்று சென்றாராயினும் சென்றவிடத்தே தங்கியுறைபவரல்லர்; வருவேமென்று அவர் கூறிய கார்காலம் இன்றுதான் தொடங்குகின்றதாதலின் இன்னே வருகுவர்காண்; அதுகாறும் நீ வருந்தாதேகொள்ளென்று வலியுறுத்திக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "பெறற்கரும் பெரும்பொருள்" (தொல். கள. 9) என்னும் நூற்பாவின்கண் "பிறவும் வகைபட வந்த கிளவி" என்பதனாற் கொள்க.
| வரையா நயவினர் நிரையம் பேணார் |
| கொன்றாற்றுத் துறந்த மாக்களின் அடுபிணன் |
| இடுமுடை மருங்கில் தொடுமிடம் பெறாஅது |
| புனிற்று நிரை கதித்த பொறிய முதுபாறு |
5 | இறகு 1 புடைத்து இற்ற பறைப்புன் தூவி |
| செங்கணைச் செறித்த வன்கண் ஆடவர் |
| ஆடுகொள் நெஞ்சமொடு அதர்பார்த்து அல்கும் |
| அத்தம் இறந்தன ராயினும் நம்துறந்து |
| அல்கலர் வாழி தோழி உதுக்காண் |
10 | இருவிசும்பு அதிர மின்னிக் |
| கருவி மாமழை கடன்முகந் தனவே. |
(சொ - ள்.) தோழி வாழி - தோழீ! வாழ்வாயாக!; வரையா நயவினர் நிரையம் பேணார் - அளவு படாத நயமுடையராய் நிரையம் போன்ற தீய நெறியைக் கைக் கொள்ளா தொழுகும் நங்காதலர்; ஆற்றுக்கொன்றுத் துறந்த மாக்களின் அடுபிணன் இடு முடை மருங்கில் தொடும் இடம் பெறாது - சுரத்திலே கொன்று போகடப்பட்ட மக்களினுடைய கொலையுண்ட பிணங்களில் உள்ள நிறைந்த தீ நாற்றத்தையுடைய அவற்றின் அருகிலே சென்று பறித்துத் தின்ன இயலாது; புனிற்று நிரை கதித்த பொறிய முது பாறு இறகு புடைத்து இற்ற பறைப் புன் தூவி - ஈன்ற அணிமையால் நெருங்காது வெறுத்துக் கடந்து போயிருந்த புள்ளிகளையுடைய முதிய பருந்து தன் சிறகை