அடித்துக் கொள்ளுதலால் உதிர்ந்த பறத்தலையுடைய புல்லிய இறகை; செங் கணைச் செறித்த வன்கண் ஆடவர் - சிவந்த அம்பிலே கட்டிய வீரத்தன்மையுடைய மறவர்; ஆடு கொள் நெஞ்சமொடு அதர் பார்த்து அல்கும் அத்தம் இறந்தனர் ஆயினும் - தாம் வெற்றி கொள்ளும் கருத்துடனே நெறியைப் பார்த்து உறைகின்ற மலைவழியிலே சென்றனராயினும்; நம் துறந்து அல்கலர் - நம்மைக் கைவிட்டு அங்கே தங்குபவரல்லர்; உதுக் காண் இரு விசும்பு அதிர மின்னிக் கருவி மா மழை கடல் முகந்தன - அவர் கார்காலத்து வருவே மென்றார் ஆதலின் உவ்விடத்தே பாராய்! கரிய ஆகாயம் அதிரும்படி இடித்து மின்னி இடி மின்னல் முதலாய தொகுதியையுடைய கரிய மேகம் கடனீரை முகந்து வந்தன; அவர் இன்னே வருகுவர் போலும்; எ - று.
(வி - ம்.) நம்பால் அளவுபடாத அன்புடையராதலின் நினக்கு வருவேமென்று பொய்ச்சூளுரைத்து அதுகாரணமாகப் பின்னரெய்தும் நிரையங்கொள்பவர் அல்லரென்றாள்.
இறைச்சி:- (1) ஈன்ற பருந்து மக்களிறந்த பிணத்தின் முடை நாற்றம் மிகுதியால் அருகிலே நெருங்கித் தின்னமாட்டாது அகன்று போய் இருக்கும் என்றது, நினது நெற்றியிலே தோன்றும் பசலை அவர் நின்பால் வைத்திருக்கும் காதல் மிகுதியால் குறித்தநாளிலே வருதல் மெய்ம்மை ஆதலின் அதுகண்டு தானே யகன்றொழியும் என்றதாம்.
இறைச்சி:- (2) கணை செறித்த ஆடவர் வெல்லும் நெஞ்சத்துடன் நெறிநோக்கித் தாங்காநிற்பரென்றது, கொடுமையுடைய அயல்மாதர் பலரும் நின்னை அலர்தூற்றுங் கருத்தோடு அற்றம் நோக்கி இருப்பவர் ஆதலின் நின்மெய்யின் வேறுபாடு அறிந்தால் இகழ்ந்து அலர்தூற்றா நிற்பர் என்றதாம். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - தலைவியை ஆற்றுவித்தல்.
(பெரு - ரை.) நயவு - நன்மை, நிரையம்; ஆகுபெயர். பிணன் - பிணம். பாறு - கழுகு. பறை - பறத்தல். ஆடு - வெற்றி.
(329)
திணை : மருதம்.
துறை : இது, தோழி தலைமகனை வாயின்மறுத்தது.
(து - ம்,) என்பது பரத்தையிற் பிரிந்து மீண்டுவந்து தலைவியின் ஊடலைத் தணிக்கும்படி தோழியை வாயில்வேண்ட, அவள் தலைவனை நோக்கி ஊரனே! நீ பரத்தையரை எம் மனையின்கண்ணே கொண்டு வந்து வதுவை அயர்ந்து தழுவியிருந்தாலும் அவரது மனத்தின்கண் உண்மை அரிதாதலையும் அவர் கற்புடைமகளிராய் எம்மோடொத்தல் அரிதாதலையும் நீ அறிந்தாயல்லைபோலுமென்று கூறித் தலைவனியல்பையும் உள்ளுறையாலே கடிந்து கூறாநிற்பது.