(இ - ம்.) இதற்கு, "நீத்த கிழவனை நிகழுமாறு படீஇக் காத்த தன்மையிற் கண்ணின்று பெயர்ப்பினும்" (தொல். கற். 9) என்னும் விதிகொள்க.
| தடமருப்பு எருமைப் பிறழ்சுவல் இரும்போத்து |
| மடநடை நாரைப் பல்இனம் இரிய |
| நெடுநீர்த் தண்கயந் துடுமெனப் பாய்ந்து |
| நாள்தொழில் வருத்தம் வீடச் சேட்சினை |
5 | இருள்புனை மருதின் இன்னிழல் வதியும் |
| யாணர் ஊரநின் மாணிழை மகளிரை |
| எம்மனைத் தந்துநீ தழீஇயினும் அவர்தம் |
| புன்மனத்து உண்மையோ அரிதே அவரும் |
| பைந்தொடி மகளிரொடு சிறுவர்ப் பயந்து |
10 | நன்றி சான்ற கற்போடு |
| எம்பா டாதல் அதனினும் அரிதே. |
(சொ - ள்.) தட மருப்பு எருமைப் பிறழ் சுவல் இரும்போத்து - வளைந்த கொம்பையும் வலிமை பெற்று விளங்கிய பிடரியையும் உடைய கரிய எருமைக்கடா; மட நடை நாரைப்பல் இனம் இரிய - இள நடையையுடைய பலவாகிய நாரையின் கூட்டம் எல்லாம் இரிந்தோடும்படியாக; நெடு நீர்த் தண்கயம் துடும் எனப் பாய்ந்து நாள் தொழில் வருத்தம் வீட - நெடிய நீர் நிரம்பிய தண்ணென்ற பொய்கையிலே 'துடும்' என்னும் ஒலியுண்டாம்படி தான் காலையில் உழுத தொழிலின் வருத்தம் நீங்குமாறு பாய்ந்துகிடந்து; சேண் சினை இருள் புனை மருதின் இன்நிழல் வதியும் - தன்னுடம்பின் அயா நீங்கிய பின்னர் நீண்ட கிளைகளையுடைய இருள் நிரம்பிய மருதமரத்தின் இனிய நிழலின் கண்ணே தங்கியிருக்கும்; யாணர் ஊர - புது வருவாயினையுடைய ஊரனே!; நின் மாண் இழை மகளிரை எம்மனைத் தந்து - நின்னுடைய மாட்சிமை பொருந்திய கலன் அணிந்த பரத்தை மகளிரை எமது மனையின்கண் அழைத்துவந்து; நீ தழீஇயினும் - நீ குலமகளிரைப் போலக் கருதி மணந்து தழுவியிருந்தாலும்; அவர் தம் புன் மனத்து உண்மையோ அரிது - அவருடைய புல்லிய மனத்திலே கரவில்லாதபடி மெய்ம்மை தோன்றுதல் அரிதேயாகும்; அவரும் பைந்தொடி மகளிரொடு சிறுவர்ப்பயந்து - அவரும் பசிய வளையணிந்த புதல்வியரையும் புதல்வரையும் ஈன்று; நன்றி சான்ற கற்போடு எம்பாடு ஆதல் - நன்மையமைந்த கற்புடனே எம் பக்கத்து அமர்தலும்; அதனினும் அரிது - அதனினுங் காட்டில் அரிய தொன்றாகும்; அங்ஙனமாதலை நீ அறிந்தாய் அல்லை போலும்; எ - று.