பக்கம் எண் :


567


     (து - ம்,) என்பது, களவினொழுகுந் தலைமகன் பகற்குறி இடையீடுபட்டுத் தோழியை நெருங்கி இரவுக்குறி வேண்டுதலானே அதற்குத் தான் உடன்பட்டுத் தலைமகளை உடன்படுத்துவாளாய் அவளருகிலே அடைதலும் அவள் தோழியை நோக்கியபோது தோழி மலைநாடன் இரவுநடுயாமத்தில் வருகிற்பேன் என்றானாதலின், அங்ஙனம் வரின் நமது உயிரினிலை எவ்வாறாமோ வென்பாள் போன்று உள்ளுறையால் இறைமகள் உடன்பட வேண்டுவதை அறிவுறுத்த வந்தவள் அங்கு ஆயத்தார் பலரும் அருகிருப்ப தறிந்து தான் கூறவந்ததனை வெளிப்படையாகக் கூறாது கண்ணாலே புலப்படச் சைகைசெய்து கூறாநிற்பது.

    (இ - ம்.) இதற்கு, "புணர்ச்சி வேண்டினும்" (தொல். கள. 23) என்னும் விதிகொள்க.

    
கருவிரல் மந்திச் செம்முகப் பெருங்கிளை 
    
பெருவரை அடுக்கத்து அருவி ஆடி 
    
ஓங்குகழை ஊசல் தூங்கி வேங்கை 
    
வெற்பணி நறுவீ கற்சுனை உறைப்பக் 
5
கலையொடு திளைக்கும் வரையக நாடன் 
    
மாரி நின்ற ஆரிருள் நடுநாள் 
    
அருவி அடுக்கத்து ஒருவேல் ஏந்தி 
    
மின்னுவசி விளக்கத்து வருமெனின் 
    
என்னோ தோழிநம் இன்னுயிர் நிலையே. 

     (சொ - ள்.) தோழி கருவிரல் செம்முகம் பெருங்கிளை மந்தி - தோழீ! கரிய விரலையும் சிவந்த முகத்தையுமுடைய பெருங்கூட்டமாகிய முசுக்களைச் சுற்றமாகவுடைய பெண்குரங்கு; பெருவரை அடுக்கத்து அருவி ஆடி - பெரிய மலைப்பக்கத்து அருவியில் விளையாடி; ஓங்கு கழை ஊசல் தூங்கி - உயர்ந்த மூங்கிலிலேறி அதன் நுனியை ஊசலாகக் கொண்டு ஊசலாடி; வெற்பு வேங்கை அணி நறு வீ கல்சுனை உறைப்பக் கலையொடு திளைக்கும் வரை அகநாடன் - மலையில் வேங்கையின் அழகிய நறிய மலர் அங்குள்ள சுனையிலே மிக உதிர்ந்து விழும்படி அதன் கிளையிலேறிக் கடுவனொடு புணராநிற்கும் மலையகநாடன்; மாரி நின்ற ஆர் இருள் நடுநாள் - மழை பெய்கின்ற மாந்தர் இயங்குதற்கரிய இருள்நிறைந்த நடுயாமத்தில்; அருவி அடுக்கத்து ஒரு வேல் ஏந்தி - அருவியையுடைய மலைப்பக்கத்தின் கண்ணதாகிய நெறியில் ஒப்பற்ற வேற்படையை யேந்தி; மின்னு வசி விளக்கத்து வரும் எனின் - மழையின் மின்னலானது இருளைப் பிளக்க அம்மின்னல் விளக்கத்தில் வருவதாகக் கருதினனென்றால்; நம் இன்உயிர் நிலை என் - அவன் வருநெறியை நினைந்து வருந்துகின்ற நம்முடைய இனிய உயிர் இனி எவ்வாறு நிலைத்திருக்குமோ? அறிகின்றிலேன்; எ - று.