(து - ம்,) என்பது, களவுக் காலத்துத் தலைமகன் இரவுக்குறி வந்து ஒழுகா நிற்கையில் அலரெழுந்தது கண்டு அவ் வலர் அடங்குங்காறும் அகன்று வைகுவமெனப் பிரிந்து ஒருசார் சென்றுறையுங்காலைப் பிரிவால் ஆற்றாத தலைமகள் தோழியை நெருங்கி நீ என்னை வருந்தாது பொறையோடிரு வென்று புகலா நின்றனை; மாலைவந்தது; அவர் தேர் வந்திலது கண்டாய்; காம நோய் என்னை நலியா நின்றது; நாரை பெடையை முயங்கும்படி அழையா நிற்கும்; இன்னதொரு பொழுதில் யான் எங்ஙனம் துயரம் நீங்கி உறைவேன் என்று நொந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, "வரைவிடை வைத்த காலத்து வருந்தினும்" (தொல். கள. 21) என்னும் விதிகொள்க.
| கடுங்கதிர் ஞாயிறு மலைமறைந் தன்றே |
| அடும்புகொடி துமிய ஆழி போழ்ந்தவர் |
| நெடுந்தேர் இன்னொலி இரவுந் தோன்றா |
| இறப்ப எவ்வம் நலியும் நின்நிலை |
5 | நிறுத்தல் வேண்டும் என்றி நிலைப்ப |
| யாங்ஙனம் விடுமோ மற்றே மால்கொள |
| வியலிரும் பரப்பின் இரையெழுந் தருந்துபு |
| புலவுநாறு சிறுகுடி மன்றத் தோங்கிய |
| ஆடரைப் பெண்ணைத் தோடுமடல் ஏறிக் |
10 | கொடுவாய்ப் பேடைக் குடம்பைச் சேரிய |
| உயிர்செலக் கடைஇப் புணர்துணைப் |
| பயிர்தல் ஆனா பைதலங் குருகே. |
(சொ - ள்.) கடுங் கதிர் ஞாயிறு மலை மறைந்தன்று - கடிய கதிரையுடைய ஞாயிறும் மேலைத் திசையிலுள்ள அத்தமனக் குன்றின் கண்ணே மறைந்தொழிந்தது; அடும்பு கொடி துமிய ஆழி போழ்ந்து அவர் நெடுந் தேர் இன் ஒலி இரவும் தோன்றா - அடும்பின் கொடிகள் துண்டித்து விழும்படி தேருருள்