(து - ம்.) என்பது, களவின்வழிவந் தொழுகுந் தலைமகன் கரந்து ஒருபுறம் வந்துறைவதனை யறிந்த தோழி அவன் கேட்டுவிரைய வரைவொடு புகுமாறு தலைவியை நெருங்கி அன்னை தலைவியை இல்வயிற் செறித்து வெறியெடுக்கத் துணிந்தனளென உள்ளுறையா லுரைத்து அவன்பால் தாம் அன்புடையராய் அவன் இன்றியமையா திருத்தலை மீட்டும் நாம் தினைப்புனங் காவலைக் கருதினமாயின் அவன் அதனையறியாது தன்னூர் சென்று விடுவனோவென வெளிப்படக் கூறி வரைவுகடாவாநிற்பது.
(இ - ம்.) இதனை, "களனும் பொழுதும் . . . . அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல். கள. 23) என்பதனால் கொள்க.
| அணிவரை மருங்கின் ஐதுவளர்ந் திட்ட |
| மணியேர் தோட்ட மையார் ஏனல் |
| இரும்பிடித் தடக்கையின் தடைஇய பெரும்புனம் |
| காவல் கண்ணினம் ஆயின் ஆயிழை |
5 | நம்நிலை இடைதெரிந்து உணரான் தன்மலை |
| ஆரம் நீவிய அணிகிளர் ஆகம் |
| சாரல் நீளிடைச் சாலவண்டு ஆர்ப்பச் |
| செல்வன் செல்லுங்கொல் தானே உயர்வரைப் |
| பெருங்கல் விடரகஞ் சிலம்ப இரும்புலி 10 | களிறுதொலைத்து உரறுங் கடிஇடி மழைசெத்துச் | செந்தினை உணங்கல் தொகுக்கும் | | | இன்கல் யாணர்த்தம் உறைவின் ஊர்க்கே. | |
(சொ - ள்.) ஆய் இழை - ஆராய்ந்து அணிந்த இழையினையுடையாய்!; அணி வரை மருங்கின் ஐது வளர்ந்திட்ட மணி ஏர் தோட்ட மை ஆர் ஏனல் - அழகிய மலைப்பக்கத்தில் வியப்புடையதாய் வளர்ந்த நீலமணி போன்ற தோட்டினையுடைய நிரம்பிய கருமையான தினைக்கதிர் எல்லாம்; இரும் பிடித் தடக்கையின்