(து - ம்.)என்பது, மணஞ்செய்து கொள்ளாது நெடுங்காலம் தலைமகன் களவின்வழி வந்தொழுகுதலினாலே, அது பொறாது வருந்திய தலைமகளை நீ வருந்தாது பொறையோடிருவென்று தோழி வலியுறுத்திக் கூறலும், அது கேட்ட தலைவி என்னுடம்பின் கண்ணதாகிய நலமானது தலைவன்பாலேகி மீண்டுவந்த பரிசிலர் கூறுஞ் சிறந்த மொழிகளைக் கண்டு கேட்டு மகிழுமளவும் என்னை உயிரோடு விடுமோவென அழிந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "வரைவிடை வைத்த காலத்து வருந்தினும்" என்பதன்கண் "தொகுத்த மொழியான் வகுத்தனர் கோடல்" (தொல். கள. 21) என்னும் தந்திரவுத்தியினால் அமைத்துக் கொள்க.
| முழங்குகடல் முகந்த கமஞ்சூல் மாமழை |
| மாதிரம் நனந்தலை புதையப் பாஅய் |
| ஓங்குவரை மிளிர வாட்டிப் பாம்பெறிபு |
| வான்புகு தலைய குன்றம் முற்றி |