நீட்டியாது குறித்த பருவத்து வருதலைக் கருதி அவனை எதிர்ப்பட்டு நின் பிரிவு கேட்டு நாவெழாமற் கண்ணீர்விட்டழுமிவள் நீ வருமளவும் எவ்வாறு ஆற்றியிருப்பளென வருந்திக் கூறா நிற்பது.
(இ - ம்.) இதற்கு, "பிரியுங் காலை எதிர்நின்று சாற்றிய எதிரும்" (தொல்-கற்- 23) என்னும் விதி கொள்க.
| அண்ணாந் தேந்திய வனமுலை |
| படுசுட ரடைந்த பகுவாய் நெடுவரை |
| முரம்புசேர் சிறுகுடிப் பரந்த மாலைப் |
| புலம்புகூட் டுண்ணும் புல்லென் மன்றத்துக் |
| கல்லுடைப் படுவிற் கலுழி தந்து |
5 | நிறைபெய லறியாக் குறைக்கூ ணல்லில் |
| துவர்செய் யாடைச் செந்தொடை மறவர் |
| அதர்பார்த் தல்கும் அஞ்சுவரு நெறியிடை |
| இறப்ப எண்ணுவர் அவரெனின் மறுத்தல் |
| வல்லுவங் கொல்லோ மெல்லிய னாமென |
10 | விம்முறு கிளவிய ளென்முக நோக்கி |
| நல்லக வனமுலைக் கரைசேர்பு |
| மல்குபுனல் பரந்த மலரேர் கண்ணே |
(சொ - ள்.) மெல்இயல் படு சுடர் அடைந்த பரந்த மாலை - எம்பெருமானே ! தலைமகள் என்னை நோக்கி மெல்லியால் ! மேலைத்திசையிற் செல்லுகின்ற ஆதித்த மண்டிலம் மறைந் தொழிதலாலே பரவிய மாலைப் பொழுதில்; பகுவாய் நெடுவரை முரம்புசேர் சிறுகுடி - பிளவுபட்ட நீண்ட மலைச்சார்பில் வன்னிலத்தமைந்த சிறு குடியின்கண்; புலம்பு கூட்டுண்ணும் புல்லென் மன்றத்து - அச்சமிக்கிருக்கும் பொலிவழிந்த பொதியிலில்; கல்லுடைப் படுவில் கலுழி தந்து - கல்லையுடைய குழிகளிலுள்ள கலங்கனீரைக் கொணர்ந்து கொடுத்து; நிறை பெயல் அறியாக் குறைக்கு ஊண் அல்லில் - நிறைந்த மழையைக் கண்டறியாத குறைந்த உணவையுடைய இராப் பொழுதிலே; துவர் செய் ஆடைச் செந்தொடை மறவர் அதர்பார்த்து அல்கும் அஞ்சு வரும் நெறியிடை - துவர்த்த நிறத்தையுடைய ஆடையையும் செவ்விய அம்புத் தொடையையுமுடைய ஆறலைகள்வர் நெறி நோக்கியிருக்கும் அச்சம் வரும் வழியின்கண்ணே; அவர் இறப்ப எண்ணுவர் எனின் யாம் மறுத்தல் வல்லுவம் கொல்லோ? என- அவர் செல்லக் கருதுவர் எனின் யாம் மறுக்கவல்லேமோ என்று; விம்முறு கிளவியள் என் முகம் நோக்கி - வெளியிற் போதாமே விம்மிய சொல்லையுடையளாய் என் முகத்தை நோக்கலும்; மலர் ஏர் கண் - அவ்வளவில் அவளுடைய மலர் போன்ற கண்களிலிருந்து;