(து - ம்.) என்பது, தலைமகன் வரையாது நெடுங்காலம் பகல்வந் தொழுகுவது கண்ட தோழி, அவன் விரைய மணஞ்செய்துகொள்ளுமாறு நெருங்கி ஐயனே! உம்மோடு யாம் கிளிகடிந்து ஊசல்தூங்கி அருவியாடி வருவதினும் இனியதொன் றில்லையாயினும், அதனால் எமக்குண்டாகிய புதுமண முதலாயவற்றை அன்னை நோக்கிச் சுட்டி உயிர்த்துச் சீறாநின்றனள்; அதனையஞ்சி யாம் இல்வயிற்செறிப்புற்று இரங்கத்தக்கேம் ஆயினேம் என்று நொந்து கூறாநிற்பது.
| பெரும்புனங் கவருஞ் சிறுகிளி ஓப்பிக் |
| கருங்கால் வேங்கை ஊசல் தூங்கிக |
் | கோடேந்து அல்குல் தழையணிந்து உம்மோடு |
| ஆடினம் வருதலின் இனியதும் உண்டோ |
5 | நெறிபடு கூழைக் கார்முதிர்பு இருந்த |
| வெறிகமழ் கொண்ட நாற்றமுஞ் சிறிய |
| பசலை பாய்தரு நுதலும் நோக்கி |
| வறிதுகு நெஞ்சினள் பிறிதொன்று சுட்டி |
| வெய்ய உயிர்த்தனள் யாயே |
10 | ஐய அஞ்சினம் அளியம் யாமே. |