(து - ம்.) என்பது, சென்று வினைமுடித்து மீண்டுவருகின்ற தலைமகன் தேர்ப்பாகனை நோக்கிப் 'பாகனே! மேகம் மழைபெய்யத் தொடங்கின கண்டாய்; அதுகண்டு நம் காதலி திண்ணமாக அழத்தொடங்கி விட்டனளேயாம்; அவளின்னும் வருந்துமாறு ஆயர் குழலோசை தொடங்கினர்; அதனைக் கேளாய்' என அவன் விரைந்து தேர் விடுமாறு கவன்று கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, "பேரிசை யூர்திப் பாகர் பாங்கினும்" (தொல். கற். 5) என்னும் விதி கொள்க.
| காயாங் குன்றத்துக் கொன்றை போல |
| மாமலை விடரகம் விளங்க மின்னி |
| மாயோள் இருந்த தேஎம் நோக்கி |
| வியலிரு விசும்பகம் புதையப் பாஅய்ப் |
5 | பெயல்தொடங் கினவே பெய்யா வானம் |
| நிழல்திகழ் சுடர்த்தொடி ஞெகிழ ஏங்கி |
| அழல்தொடங் கினளே ஆயிழை அதனெதிர் |
| குழல்தொடங் கினரே கோவலர் |
| தழங்குரல் உருமின் கங்கு லானே. |
(சொ - ள்.) பெய்யா வானம் காயாங் குன்றத்துக் கொன்றை போல - பாகனே! இதுகாறும் மழைபெய்யாதிருந்த மேகங்கள் நிறைய மலர்ந்திருக்கின்ற காயா மரங்களையுடைய மலையின்கண்ணே இடையே சரக்கொன்றை மலர்ந்தாற்போல; மா மலை விடர் அகம் விளங்க மின்னி - பெரிய மலைப் பிளப்பிடங்கள் எல்லாம் விளங்கும்படியாக மின்னி; மாயோள் இருந்த தேஎம் நோக்கி - என் காதலியாகிய மாமை நிறமுடையாள் இருந்த இடம் நோக்கிச் சென்று; வியல் இரு விசும்பு அகம் புதையப் பாஅய்ப் பெயல் தொடங்கின - அகன்ற கரிய ஆகாயத்தினிடம் எல்லாம் மறைபடும்படி பரந்து மழை பெய்யத் தொடங்கிவிட்டன; ஆய் இழை நிழல் திகழ் சுடர்த்தொடி ஞெகிழ ஏங்கி அழல் தொடங்கினள் - ஆதலால் ஆராய்ந்தணிந்த கலன்களையுடைய நங் காதலி நிழல் விளங்கிய ஒளியையுடைய கைவளைகள் கழன்றுவிழத் திண்ணமாக ஏக்கமுற்று அழத் தொடங்கினளேயாம்; அதன் எதிர் கங்குலான் கோவலர் தழங்குரல் உருமின் குழல் தொடங்கினர் - அவள் அழுமிடத்துக்கு எதிரே இராப்பொழுதில் முழங்குகின்ற இடியோசை போலக் கோவலர் புல்லாங்குழலை வாசிக்கத் தொடங்கினவராவார்; ஆதலின் விரைவிலே தேரைச் செலுத்துவாயாக! எ-று.
(வி - ம்.) மலர்ந்தகாயா நீருண்ட மேகத்துக்கும், மலர்ந்த கொன்றை மின்னலுக்கும் உவமை. தொடங்கினள், தொடங்கினரென்பன தெளிவுபற்றி வந்த காலவழுவமைதி.