(து - ம்.) என்பது, மணஞ்செய்து கொள்ளாது தலைமகன் நெடுங்காலம் களவின் வந்தொழுகுதலானே வருந்துந் தலைமகளது நிலைமை இன்னதென வுணர்ந்த தோழி தலைமகனை யடைந்து 'சேர்ப்பனே! எம் தலைவி மகிழும் வண்ணம் எம்மூரின் கண்ணே வரைவொடுவரின் அது நலமாகு'மென்று வெளிப்படையாகக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "களனும் பொழுதும் . . . . . . அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல். கள. 23) என்னும் விதியாற் கொள்க.
| நீடுசினைப் புன்னை நறுந்தாது உதிரக் |
| கோடுபுனை குருகின் தோடுதலைப் பெயரும் |
| பல்பூங் கானல் மல்குநீர்ச் சேர்ப்ப |
| அன்பிலை ஆதலின் தன்புலன் நயந்த |
5 | என்னும் நாணும் நன்னுதல் உவப்ப |
| வருவை ஆயினோ நன்றே பெருங்கடல் |
| இரவுத்தலை மண்டிலம் பெயர்ந்தென உரவுத்திரை |
| எறிவன போல வரூஉம் |
| உயர்மணல் படப்பைஎம் உறைவின் ஊரே. |
(சொ - ள்.) நீடு சினைப் புன்னை நறுந்தாது உதிரக் கோடு புனை குருகின் தோடு தலைப்பெயரும் - நீண்ட கிளையையுடைய புன்னையின் நறிய மகரந்தம் உதிரும்படி அக் கிளைகளின்மீது அலங்கரித்தாற்போன்று வைகிய நாரையின் கூட்டம் இரை வேண்டிப் பெயர்ந்து உலாவாநிற்கும்; பல் பூங்கானல் மல்கு நீர்ச் சேர்ப்ப - பலவாகிய மலர்களையுடைய கடற் கரைச் சோலையையும் மிக்க உவர்நீரையுமுடைய நெய்தனிலத் தலைவனே!; அன்பு இலை ஆதலின் - நீ பலகாலும் வந்து முயங்கியும் எம்பால் அன்புடையை அல்லை; என்னும் தன்புலன் நயந்த நாணும் நல்நுதல் உவப்ப - அங்ஙனம் அன்புடையையா யிருப்பின் அவளுடைய அறிவின் வழியே ஒழுகுகின்ற என்பாலும் சொல்லுவதற்கு வெள்குகின்ற நல்ல நுதலையுடையாளாகிய அத்தலைவி உவக்கும் வண்ணம்; பெருங்கடல் இரவுத்தலை மண்டிலம் பெயர்ந்தென உரவுத் திரை எறிவன போல வரூஉம் உயர்மணல் படப்பை - பெரிய கடலிடத்து இராப் பொழுதிலே தண்கதிர்த்திங்கள் தோன்றுதலானே அதுகண்ட வலிய அலைகள் மோதுவனபோல