(து - ம்,) என்பது, களவின் வழிவந் தொழுகுந் தலைமகன் யாதோ வொருகாரியமாக இறைமகளை யகன்று போகியகாலை மாலையம் பொழுது கண்டு அவ்விறைமகள் வருந்துவதறிந்த தோழி தான் அவளை ஆற்றுவிக்காது தனியே வருந்தலும், அதனை யறிந்த தலைவி தான்படுந் துன்பத்தை யடக்கிக்கொண்டு தோழியை நெருங்கித் 'தோழீ! நம்மை யகன்ற காதலரை நினைந்து நாம் வருந்துவதாயினும் அவரும் நாணும் படி அலரெழுமாதலிற் கரத்தல் வேண்டும் என்பதறிந்தே யான் வருந்துகிலே'னென ஆய்ந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, "கையறு தோழி கண்ணீர் துடைப்பினும்" (தொல். கள. 20) என்னும் விதிகொள்க.
| கானல் மாலைக் கழிநீர் மல்க |
| நீல்நிற நெய்தல் நிறையிதழ் பொருந்த |
| ஆனாது அலைக்குங் கடல்மீன் அருந்திப் |
| புள்ளினம் குடம்பை யுடன்சேர்பு உள்ளார் |
5 | துறந்தோர் தேஎத்து இருந்துநனி வருந்தி |
| ஆருயிர் அழிவது ஆயினும் நேரிழை |
| கரத்தல் வேண்டுமால் மற்றே பரப்புநீர்த் |
| தண்ணந் துறைவன் நாண |
| நண்ணார் தூற்றும் பழிதான் உண்டே. |