பக்கம் எண் :


668


அஞ்சுவல் - எனது இனி வரும் பிறப்பு மக்கட் பிறப்பின்றி வேறொரு பிறப்பாகி மாறிவிடின் என் காதலனை அப்பொழுது மறப்பேனோ வென்று அவ்வொன்றனுக்கே யான் அஞ்சாநிற்பேன்; எ - று.

     (வி - ம்.) நோயும் பேருமென்றது, இறக்குமுன் நோய் காடேறிற்றென்னும் வழக்கு. தௌவல் - பொலிவழிதல். பிறப்புப் பிறிதாகுவது மக்கட் பிறப்பின்றி விலங்கு, பறவை முதலாகிய பிறப்பினுட் பிறத்தல். இது, கலக்கம். இவ்வாறே "என்கண்ணே, நோக்கி நோக்கி வாளிழந் தனவே" என்றார் கேள்வனைப் பிரிந்து வருந்திய வெள்ளிவீதியார். (குறுந்தொகை - 44).

     ஏனையவற்றா லெய்துந் துன்பத்தா லுய்ந்தாலும் இனி வரும் மாலை வருத்தலால் உய்யேனென்னுங் குறிப்பால் மாலையும் வந்ததென்றாள். மெய்ப்பாடு - அழுகை. பயன் - அயாவுயிர்த்தல்.

     (பெரு - ரை.) உண்மையான காதலின் ஆழத்தை இச் செய்யுள் மிக அழகாக எடுத்துக் காட்டுதல் காண்க. இவ்வினிய செய்யுட் கருத்தோடு,

  
"துறக்கப் படாத உடலைத் துறந்துவெந் தூதுவரோடு 
  
 இறப்பன் இறந்தால் இருவிசும் பேறுவன் ஏறிவந்து 
  
 பிறப்பன் பிறத்தால் பிறையணி வார்சடைப் பிஞ்ஞகன்பேர் 
  
 மறப்பன்கொ லோஎன்றென் னுள்ளங் கிடந்து மறுகிடுமே" 

என வரும் ஆளுடைய அரசர் திருப்பாட்டையும் (4. 113. 8.) நினைக.

(397)
  
    திணை : நெய்தல்.

     துறை : இது, முன்னுறவுணர்ந்து பகற்குறி வந்து மீளுந் தலை மகனை நீதான் இவளது தன்மையை ஆற்றுவியெனத் தோழி சொல்லியது.

     (து - ம்,) என்பது, பிரியின் உயிர்வாழாளென முன்னமே அறிந்து வைத்தும் மணம்புரியாது களவொழுக்கம் மேற்கொண்டு பகற்குறி வந்து மீளுந் தலைமகனைத் தோழி நெருங்கிச் சேர்ப்பனே! நேற்றைப் பொழுதில் யாம் கானலின் கண்ணே விளையாட்டயர்ந்து மீளுங்காலை 'மாலைவந் திறுத்தது; மகளிரும் ஊர்வயி னேகினர்; யாமும் போவோம் வாராய்' என்று யாம் கூற நின் காதலி எதிர்மொழி கொடாளாய் நீ புரிந்ததனை நினைந்து மாறாது அழுது நின்றனள்; இன்னதொரு தன்மையுடையாளை நீயே ஆற்றுவித்துச் செல்வாயென்று வரைவு தோன்றக் கூறாநிற்பது.

     (இ - ம்.) இதனை, "களனும் பொழுதும்................அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல். கள. 23) என்பதனால் கொள்க.

    
உருகெழு தெய்வமும் கரந்துறை கின்றே 
    
விரிகதிர் ஞாயிறுங் குடக்குவாங் கும்மே