(து - ம்.) என்பது, தெய்வப்புணர்ச்சி புணர்ந்து நீங்கி இடந்தலைப்பாடுற்றுச் சென்று முந்துறக் கண்ட தலைமகன் அந்தத் தலைமகளை நோக்கி நீ நாணுகின்றனை. யானுற்ற காமம் தாங்குத லெளியதொரு காரியமோ, நின் கண்களேயன்றி நின் தோள்களும் என்னை வருத்துகின்றனகா ணென்று மெய்தொட்டுப் பயிறன் முதலானவற்றை யுள்ளடக்கிக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை "முன்னிலையாக்கல் சொல்வழிப் படுத்தல்" (தொல்-கள- 10) என்னும் நூற்பாவின்கண் "நன்னயமுரைத்தல்" என்பதன்கண் அமைத்துக்கொள்க. ஆசிரியர் இளம்பூரணர் கருத்து மிதுவேயாம். இனி, ஆசிரியர் நச்சினார்க்கினியர் இச்செய்யுளை "மெய்தொட்டுப் பயிறல்" (தொல்-கள- 11) என்னும் நூற்பாவின்கண் இடையூறு கிளத்தல், நீடுநினைந்து இரங்கல் என்னும்
| இரண்டிற்கும் பொதுவிற் காட்டாநிற்பர். |
| சொல்லிற் சொல்லெதிர் கொள்ளாய் யாழநின் |
| திருமுகம் இறைஞ்சி நாணுதி கதுமெனக் |
| காமங் கைம்மிகின் தாங்குதல் எளிதோ |
| கொடுங்கேழ் இரும்புற நடுங்கக் குத்திப் |
5 | புலிவிளை யாடிய புலவுநாறு வேழத்தின் |
| தலைமருப் பேய்ப்பக் கடைமணி சிவந்தநின் |
| கண்ணே கதவ அல்ல நண்ணார் |
| ஆண்டலை மதில ராகவும்1 முரசுகொண்டு |
| ஓம்பரண் கடந்த அடுபோர்ச் செழியன் |
10 | பெரும்பெயர்க் கூடல் அன்னநின் |
| கரும்புடைத் தோளும் உடையவா லணங்கே. |
(சொ - ள்.) சொல்லின் சொல் எதிர் கொள்ளாய் நின் திருமுகம் இறைஞ்சி நாணுதி - நங்காய்! யான் நின்னைத் தழீஇக் கொண்டு சில கூறின் அவற்றை எதிரேற்றுக் கொள்ளாயாய் நின் அழகிய முகம் இறைஞ்சி நின்று கண்புதைத்து நாணுகின்றனை; கதும் எனக் காமம் கைமிகின் தாங்குதல் எளிதோ - விரைவாகக் காமமானது கைகடந்து மிகுமாயின் அதனை யான் தாங்கியிருத்தல் எளியதொரு காரியமாமோ; புலி நடுங்கக் கொடுகேழ் இருபுறமும் குத்தி விளையாடிய - புலி நடுங்குமாறு அதன்