கூட்டத்தையுடைய தவளைக ளொலித்தலானே; நா உடைமணி ஒலி வாள் நுதல் கேளாள் - நாம் செல்லுகின்ற தேரிற் கட்டிய மணிகளின் ஒலியை ஒள்ளிய நுதலையுடைய நம் தலைவி கேட்டறிந்திலள்; அதனால் ஏகுமின் என்ற இளையர் வல்லே இல் புக்கு அறியுநர் ஆக - ஆதலின் நீயிர் முன்னே சென்று கூறுமினென்றபடி அக்கட்டளையை ஏற்ற இளையோர் விரைந்து நமது மாளிகையிற் புகுந்து அறிவித்தனராக; மெல்லென மண்ணாக் கூந்தல் மாசு அறக் கழிஇச் சில் போது கொண்டு பல் குரல் அழுத்திய அந்நிலை புகுதலின் - உடனே மெல்ல அதுகாறுஞ் சீவிக்கை செய்யாத கூந்தலின் மாசு போகத் தூநீராடிச் சிலவாய மலரைக் கொண்டு பலவாய கூந்தலிலே முடிக்கின்ற அத்தறுவாயில் யான் உள்ளே புகுதலின்; மெய்வருத்துறாஅ அவிழ்பூ முடியினள் கவைஇய - என்னை நோக்கித் தன் மெய்துவள வந்து அவிழ்ந்து குலையு முடியினளாய் என்னை அணைத்துக் கொண்ட, மடம் மா அரிவை மகிழ்ந்து அயர் நிலை மறத்தற்கு அரிது - மடப்பத்தையுடைய சிறந்த நம் அரிவை மகிழ்ந்து கொண்டாடுந் தன்மை யான் மறத்தற்கரியதுகாண்; அத்தகையாள் இன்றும் மகிழ்ந்தணைக்குமாறு விரைவிலே தேரைச் செலுத்துவாயாக ! எ - று.
(வி - ம்.)உலகு - உயிர். அவல் - பள்ளம். அறியுநர் - அறிவிக்குநர் என்பதன் விவ்விகுதி தொக்கது. என்ற : ஏதுப்பொருட்டில் வந்த பெயரெச்சம். குரல் - கூந்தல். கவைஇய - அணைத்த.
முன்னிகழ்ச்சி கூறுமுகத்தாலே இன்றும் மழை பெய்யா நின்றதெனத் தான் தலைவிக்குக் குறித்த பருவத்தைக் குறிப்பித்தான். கற்பு மிகுதி கூறுவான் மண்ணாக்கூந்தலென்றான்; தம் வனப்பைக் கண்டு மகிழும் ஆடவர் இல்வழிக் கற்புடைமகளிர் தம்மைப் புனையாராகலின் மெய்வருத்துறா என அவளது காம மிகுதி கூறினான். இவ்வளவு காம மிகுதியுடையவள் மண்ணாக்கூந்தலளெனவே அவளது நிறையுடைமை கூறினானுமாம். கவைஇய என அன்பின் மிகுதியு முடன் கூறினான். அத்தகையாள் என்பது முதற் குறிப்பெச்சம் மெய்ப்பாடு -உவகை. பயன் - கேட்ட பாகன் விரைந்து தேர்கடாவல்.
(பெரு - ரை.) அறத்தொடு பொருந்திய அல்கு தொழில் என்றும், வறத்தொடு வருந்திய என்றும், மழைபெயல் வல்வர என்றும், கிளை கறங்கு மாண்வினை என்றும், மணியொலி கொள்ளாள் என்றும் இல்புக் கறிபுணர்வாக என்றும் மெய்வருத்துராஅய் என்றும் வீழ்பூமுடியள் என்றும் பாடபேதங்கள் உண்டு.
இனி, இதன்கண் பன்னாள் எம்மைப் பிரிந்தமையால் துன்பத் தோடுறைந்த எங்காதலி எம் வரவினால் மீண்டும் புத்துணர்ச்சியும் இன்பமும் எய்தி மீண்டும் நல்லறந் தொடங்குவள். எம்மனைக்கண் அறத்துழனியெழும் என்னும் இறைச்சி தோன்ற "பன்னாள் வறத்தொடு பொருந்திய உலகு தொழிற் கொளீஇய பழமழை பொழிந்த புது நீரவல பல்கிளை கறங்க" எனக் கூறிய நுண்மை யோர்க.
(42)