பக்கம் எண் :


206


வருகுவன் - அவன் குளவியுடனே கூவிளமலரிடையிட்டுக் கட்டிய நெருங்கிய மாலையுடைவனாகி வாராநிற்பன்; யாவதும் முயங்கல் பெறுகுவன் அல்லன் - வந்தும் யாது பயன்? தலைவியின் முயக்கத்தை இனி எவ்வளவேனும் அடைபவனல்லன்; தன் மலையினும் பெரிது புலவி கொளீஇயர் - அது காரணமாகத் தன் மலையினுங்காட்டிற் பெரிதாகப் புலந்து கொள்ளினும் புலந்துகொள்வானாக!;எ - று.

     (வி - ம்.) அடார் - கருங்கற்பலகையை ஒருபால் சாய்வாக நிமிர்த்திக் கீழே முட்டுக்கொடுத்து உள்ளால் உணவு வைப்ப அவ்வுணவை விலங்கு சென்று தொடுதலுங் கல்வீழ்ந்துகொல்லும் பொறி. முசுப்பெருங்கலை - ஆண் குரங்கு. கடும்பு - சுற்றம். குளவி - மலைப்பச்சை; காட்டுமல்லிகையுமாம். கூவிளம் - வில்வம். முயங்கல் பெறுகுவனல்லன் என்றது அவன் புணர்வுமறுத்தல்.

     உள்ளுறை :- கேழல் அகப்படுமாறு வைத்த பொறியுள்ளே புலிபடு மென்றது, இத்தலைவன் ஏற்றுக்கொள்ள விரும்பியும் இவன் பாணித்தமையின் இவனினுஞ் சிறந்த தோன்றலொருவன் வரையக்கருதி வந்துளனென வேற்றுவரைவு கூறி அறிவுறுத்தியதாம்.

     இறைச்சி :- (1) மலைமான் யாட்டினத்தொடு தாவியுகளுமென்றது, வேற்றுவரைவு நேரினும் அது கலையொடு யாடுசேர்ந்தாற் போலன்றிப் பிறிதில்லையெனத் தலைவனாற்றுமாறு கூறியதாம்.

    (2) முசுக்கலை நன்மேயலாருமென்றது வரைந்து கொள்ளி்ன் இடையீடின்றித் தலைவிபால் இன்பந் துய்க்கலாகு மென்றதாம். முயங்கல் பெறுகுவனல்லனென்றது இற்செறிப்பு அறிவுறுத்தியதாயிற்று. மெய்ப்பாடு - வெகுளி பற்றிய பெருமிதம். பயன் - வரைவு கடாதல்.

     (பெரு - ரை.) ஆர்தரவந்தனன் என்றதற்கு இன்பம் நுகர்தற்கு வந்தனன் என்று பொருள்கோடல் நேரிதாம். இன்பம் நுகர்தற்கு வந்தனன் ஆயினும் அதற்கியன்ற வரைவொடு வாரானாய் வரைவு நீடற்கே வருகுவன். அவள்தானும் இற்செறிக்கப்பட்டுவிட்டமையான் முயங்கல் பெறுகுவானும் அல்லன். அவன் புலப்பினும் புலந்திடுக என்பது கருத்தென்க. 'கூதளம் ததைந்த கண்ணியன்' என்றும் பாடம்.

(119)
  
     திணை : மருதம்.

     துறை : இது, விருந்துவாயிலாகப்புக்க தலைவன் சொல்லியது.

     (து - ம்.) என்பது, பரத்தையிற் பிரிந்தவன் தலைவியின் ஊடலைத் தணிக்கப் பெறானாய் விருந்தொடு புகுதக்கண்டு அவள் தன் ஊடலையடக்கி விருந்தெதிர் கொண்டாளாக, அதனை நோக்கிய அத்தலைமகன் இவள் பரிகலந்திருத்தி அட்டிலிடத்தாளாயினள்; இதற்குக் காரணம் இவ்விருந்தே யாதலின் இஃதெஞ்ஞான்றும் வந்துதவுவதாக, வந்தால் இவளின் முயக்கத்தைப் பெறுதற்குரிய இனிய முகத்தைப் பார்ப்போமென்று மகிழ்ந்து கூறாநிற்பது.