பக்கம் எண் :


256


    திணை : பாலை.

    துறை : இது, பிரிவுணர்ந்து வேறுபட்ட தலைவியைத் தோழி வற்புறீஇயது.

    (து - ம்,) என்பது, தலைமகன் வினைவயிற் பிரியக் கருதியது அறிந்த தலைவி ஆற்றாளாய் வேறுபட்டுக்காட்டலும் அதனையறிந்த தோழி, 'நீ மெல்லியலாதலின் வினைவயிற்செல்லுகின்ற தம்மோடு சுரம் போதற்கியலாயென்று தமியே செல்வராதலால் யான் அவர்செலவு கருதி வருந்தினேனல்லேன், நீயும் வருந்தாதேகொள், அவர் சொல்லுங் காரியங் கைகூடுவதாக' என வாழ்த்துவாளாய் வற்புறுத்திக் கூறாநிற்பது.

    (இ - ம்.) இதனை, "பெறற்கரும் பெரும்பொருள்" (தொல். கற். 9) என்னும் நூற்பாவின்கண் "பிறவும் வகைபட வந்த கிளவியெல்லாம் தோழிக் குரிய" என்பதன்கண் அமைத்துக்கொள்க.

    
வண்ணம் நோக்கியும் மென்மொழி கூறியும் 
    
நீயவண் வருதல் ஆற்றாய் எனத்தாம் 
    
தொடங்கி ஆள்வினைப் பிரிந்தோர் இன்றே 
    
நெடுங்கயம் புரிந்த நீரில் நீளிடைச் 
5
செங்கால் மராஅத்து அம்புடைப் பொருந்தி 
    
வாங்குசிலை மறவர் வீங்குநிலை அஞ்சாது 
    
கல்லளைச் செறிந்த வள்ளுகிர்ப் பிணவின் 
    
இன்புனிற் றிடும்பை தீரச் சினஞ்சிறந்து 
    
செங்கண் இரும்புலிக் கோள்வல் ஏற்றை 
10
உயர்மருப்பு ஒருத்தல் புகர்முகம் பாயும் 
    
அருஞ்சுரம் இறப்ப என்ப 
    
வருந்தேன் தோழி வாய்க்கஅவர் செலவே. 

    (சொ - ள்.) தோழி வண்ணம் நோக்கியும் மெல் மொழி நீ அவண் வருதல் ஆற்றாய் எனக் கூறியும் - தோழீ ! நின்னுடைய நிறத்தின் மென்மையைப் பார்த்தும் மெல்லிய இனிய சொல்லால் "யாம் சென்று வினைமுடிக்கும் சுரத்தின்கண் நீ வருவதற்கு ஆற்றாய்" எனப் பலபடக் கூறியும்; தாம் தொடங்கி ஆள்வினைப் பிரிந்தோர் - தாம் தொடங்கிப் பொருளீட்டும் முயற்சியை மேற்கொண்டு அதனிற் பொருந்தியொழுகுபவர்; இன்று நெடுங்கயம் புரிந்த நீர் இல் நீள் இடை - இற்றை நாளால் நெடிய பொய்கையின்கண்ணே பொருந்திய நீரில்லாத நீண்ட வழியிலே; செங் கால் மரா அத்து அம் புடை பொருந்தி வாங்குசிலை மறவர் வீங்கு நிலை அஞ்சாது - சிவந்த அடியினையுடைய மரா மரத்தின்