பக்கம் எண் :


476


     (பெரு - ரை.) கணைக்கால் என்றது கோவேறு கழுதையின் காலை கழிச் சேற்றிலிறங்கியும் மணல் மெய்யெலாம் படியவும் விரைந்து வந்தமை தோன்றுதலின் அவன் வரைவொடு வந்துளான் என்றறிந்தேன் என்பாள் கொண்கன் ஆகுதல் இனி அறிந்தேன் என்றாள்.

(278)
  
     திணை : பாலை.

     துறை : இது, மகட்போக்கிய தாய்சொல்லியது.

     (து - ம்.) என்பது, தலைவன் கொண்டுதலைக் கழிதலும் தோழியாலறிந்த செவிலி ஈன்ற தாய்க் குரைப்ப, அவள் அஃது அறநெறிதானென்று கொண்டனள் ஆயினும் தன்மகளின் மெல்லிய தன்மை கருதி இரங்குகின்றாள், 'ஐயோ! சிலம்புகழி நோன்பாகிய விழாவின் சிறப்பை யான் காணாது பிறர்கண்டு மகிழும்படி சென்றொழிந்த என் மகளுடைய அடிகள் சுரநெறியின்கண்ணே சென்று வருந்தி நின்றனவோ' வென்று கூறாநிற்பது.

     (இ - ம்.) இதனை, "தன்னும் அவனும் அவளுஞ் சுட்டி . . . . . .போகிய திறத்து நற்றாய் புலம்பலும" (தொல். அகத். 36) என்பதன்கண் அமைத்துக் கொள்க.

    
வேம்பின் ஒண்பழம் முணைஇ இருப்பைத் 
    
தேம்பால் செற்ற தீம்பழன் நசைஇ 
    
1வைகுபனி உழந்த வாவல் சினைதொறும் 
    
நெய்தோய் திரியின் தண்சிதர் உறைப்ப 
5
நாட்சுரம் உழந்த வாட்கேழ் ஏற்றையொடு 
    
பொருத யானைப் புண் தாள் ஏய்ப்பப் 
    
பசிப்பிடி உதைத்த ஓமைச் செவ்வரை 
    
வெயில்காய் அமையத்து இமைக்கும் அத்தத்து 
    
அதருழந்து அசையின கொல்லோ ததரல்வாய்ச் 
10
சிலம்பு கழீஇய செல்வம் 
    
பிறருணக் கழிந்தஎன் ஆயிழை அடியே. 

     (சொ - ள்.) ததரல் வாய்ச் சிலம்பு கழீஇய செல்வம் பிறர் உணக்கழிந்த என் ஆய் இழை அடி - தலைவனைச் சார்ந்து மணமுடிக்கும் பொழுது காலிலணிந்திருந்த செறிந்த வாயினையுடைய சிலம்பினைக் கழற்றுதற்குச் செய்யும் விழாச்சிறப்பை யான் கண்டு மகிழாது பிறர்கண்டு மகிழும்படி சென்றொழிந்த அழகிய கலன் அணிந்த என் புதல்வியின் அடிகள்; வேம்பி்ன் ஒள் பழம் முணைஇ இருப்பைத் தேம்பால் செற்ற தீம்பழன்

 (பாடம்) 1. 
வைகுபனி யுறந்த.